மாதிரிப்படம்
ஆன்லைன் ரம்மி

’ஆன்லைன் ரம்மி - 7 மாதங்களில் 13 பேர் தற்கொலை!’

Published on

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து கடந்த 7 மாதங்களில் 13 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்றும் தமிழக மக்கள் நலனில்  திமுக அரசுக்கு அக்கறையே இல்லையா என்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.


கோவை இடையர்பாளையத்தைச் சேர்ந்த  முத்துக்குமார் என்ற தனியார்  நிறுவன பணியாளர் ஆன்லைன் ரம்மியில் இலட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட  மன உளைச்சல் காரணமாகவும், வாங்கியக் கடனை கட்ட முடியாததாலும் அவரது  வீட்டில்   தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் பல ஆண்டுகளாகவே ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு விதிக்கப்பட்டத் தடை கடந்த ஆண்டு இறுதியில் நீக்கப்பட்ட நிலையில் அவர் மீண்டும் ஆன்லைன் ரம்மி விளையாடத் தொடங்கியுள்ளார். தொடக்கத்தில் சில ஆட்டங்களில் வெற்றி பெற்று பணம் சம்பாதித்த முத்துக்குமார், அதன்பின் பணத்தை இழக்கத் தொடங்கியுள்ளார். கடந்த சில மாதங்களில் மட்டும் பல லட்சம் ரூபாயை கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில்  இழந்துள்ளார். அவ்வாறு வாங்கிய கடனுக்கு தமது சொற்ப ஊதியத்திலிருந்து  வட்டி கூட கட்ட முடியாத நிலையில் தான்  அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த விவரங்களையெல்லாம் விவரித்துள்ள அன்புமணி, “ஆன்லைன் சூதாட்டம் திறமையின் அடிப்படையிலானது அல்ல. ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை தொடக்கத்தில் சில ஆட்டங்களில் வெற்றி பெற வைத்து, அதன் மூலம் அவர்களை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாக்கும்  வகையிலும், அதன் பின்னர்  அவர்கள் அனைத்து ஆட்டங்களிலும் தோல்வியடையும் வகையிலும் தான்  ஆன்லைன் சூதாட்டத்தை சூதாட்ட நிறுவனங்கள் வடிவமைத்துள்ளன என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து  கூறி வருகிறது. அது உண்மை என்பதற்கு  முத்துக்குமாரின் அனுபவம் தான் சான்று.  ஆன்லைன் சூதாட்டம் திறமையின் அடிப்படையிலானது அல்ல, அது  வாய்ப்புகளின் அடிப்படையிலானது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க தமிழக அரசு தவறியது தான்  ஆன்லைன் சூதாட்டம் மீதான தடை நீக்கப்பட்டதற்கு காரணம் ஆகும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

”தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த நவம்பர்  10-ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்குப் பிறகு கடந்த 7 மாதங்களில் மொத்தம் 13 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.   அவர்களில்  5  பேர்  கடந்த மே  மாதத்தில்  தற்கொலை செய்து  கொண்டுள்ளனர் என்பதிலிருந்தே  ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் எவ்வளவு வேகமாக அதிகரித்து வருகின்றன என்பதை அறிந்து கொள்ள முடியும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

”ஆன்லைன் சூதாட்ட  தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே தீர்வு  சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான் என்று தமிழக அரசை வலியுறுத்தி வருகிறேன். ஆனால், அதன்பின் 7 மாதங்களுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவதற்கு எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.  மக்களைக் காப்பது தான் முதல் கடமை என்பதை உணர்ந்து ஆன்லைன் சூதாட்டங்களுக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com