இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.
இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் 9-11-2024 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் இன்று எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை அதிகாரிகளால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைப்பதோடு, அவர்களின் குடும்பங்களுக்கு பெருத்த துயரத்தையும் ஏற்படுத்துகிறது என்று கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.
09.11.2024 அன்று, இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் IND-TN-10-MM-958 மற்றும் IND-TN-10-MM-641 ஆகிய பதிவெண்களைக் கொண்ட 2 இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகள், பதிவு செய்யப்படாத இன்னொரு படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும், 12.11.2024 அன்று நாகப்பட்டினத்திலிருந்து பதிவெண் IND-TN-06-MM-8478 என்ற மீன்பிடிப் படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த 12 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2024-ம் ஆண்டில்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் முக்கியமாகக் கவனப்படுத்தியுள்ளார்.