ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வந்த நிலையில், இடையில் நீதிமன்ற உத்தரவால் தடை ஏற்பட்டது. இதை கண்டித்து பொதுமக்கள் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதனை தொடர்ந்து, அப்போதைய தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அவசர சட்டம் கொண்டு வந்தது. இதன் காரணமாக தற்போது தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த மனுக்களை விசாரித்து வந்த அரசியல் சாசன அமர்வு, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டது. தமிழக அரசு சார்பில், தொல்காப்பியம், கலித்தொகை உள்ளிட்டவற்றில் ஏறுதழுவுதல் என்ற பெயரில் ஜல்லிக்கட்டின் முழு விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், மனுக்களின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒத்தி வைத்தது. இந்த நிலையில் விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை அரசியல் சாசனம் அமர்வு இன்று வழங்குவதாக அறிவித்தது.
அதன்படி தற்போது தீர்வு வெளியாகி உள்ளது. உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, “ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் திருப்திகரமாக உள்ளது. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த ஒரு பகுதி என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஜல்லிக்கட்டு என்பது தமிழகத்தின் கலாச்சாரமாக இருந்தாலும் துன்புறுத்தல்களை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் ” எனத் தெரிவித்துள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தடை இல்லை எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.