கைதான 2 தமிழக மீனவர்கள் மீது வழக்கு இல்லை; விடுவிப்பு!

தமிழக மீனவர்கள் மூக்கையா, முத்து முனியாண்டி
தமிழக மீனவர்கள் மூக்கையா, முத்து முனியாண்டி
Published on

இலங்கையில் அத்துமீறி மீன்பிடித்ததாகக் கைதுசெய்யப்பட்ட இரண்டு தமிழக மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு ஏதும் பதியப்படவில்லை.

இராமேசுவரத்திலிருந்து நேற்றுமுன்தினம் கடலுக்குச் சென்ற விசைப்படகுகளில், வட இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம் நெடுந்தீவுக்கு அருகே ஒரு படகு மீன்பிடியில் ஈடுபட்டிருந்தது. அது அந்நாட்டு எல்லைக்கு உட்பட்ட பகுதி எனக்கூறி, விரைந்துவந்து படகைக் கொண்டு இலங்கைக் கடற்படையினர் தாக்கினர். அதில் மூக்கையா, மலைச்சாமி, இராமச்சந்திரன், முத்து முனியாண்டி ஆகியோர் இருந்தனர். அதில், 59 வயது மலைச்சாமி எனும் மீனவர் உயிரிழந்தார்.

கடலில் குதித்த இராமச்சந்திரன் காணாமல் போனார். அவரைத் தேடும் பணியில் இரண்டாவது நாளாக இன்றும் மேற்கொள்ளப்படுகிறது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே, இலங்கைக் கடற்படையால் பிடிக்கப்பட்ட மூக்கையா, முத்து முனியாண்டி ஆகிய இருவரும் யாழ்ப்பாணம் மாவட்டம் ஊர்காவல்துறை காவல்நிலையத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

வழக்கமாக இலங்கைப் படையினர் பிடித்துச்செல்லும் தமிழக மீனவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவார்கள். அவர்களின் படகு பறிமுதல் செய்யப்பட்டு திரும்ப ஒப்படைக்கப்படாது. ஆனால், இவர்கள் இருவர் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் உடல் தற்போது யாழ்ப்பாணம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரின் உடலை இந்தியாவுக்கு அனுப்பும்போது இவர்கள் இருவரையும் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com