இந்திய - இலங்கை கடற்பரப்புகளுக்கு இடையே மீன்பிடிப்பதில் பிரச்னைகள் அதிகரித்துவருகின்றன. இதில், இலங்கையின் ஈழத்தமிழ் மீனவர்கள் தரப்பில் விடுக்கப்படும் கோரிக்கைகளை இந்திய மத்திய தமிழ்நாட்டு அரசும் நிறைவேற்ற வேண்டும் என அந்நாட்டு மீனவர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தங்களின் கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய தமிழக மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அசமந்தமாக இருக்கிறது என்று இலங்கை வடமாகாண கடல் தொழிலாளர் இணையத்தின் செயலாளர் ஆலம் ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கை, மன்னாரில் ஊடகத்தினரிடம் பேசுகையில் இவ்வாறு கூறிய அவர், ”இந்திய தமிழக மீனவர்களின் அத்துமீறல் குறித்தும் இங்கு தடைசெய்யப்பட்டுள்ள இழுவைமடி குறித்தும் நாங்கள் தொடர்ச்சியாக எடுத்துச்சொல்லிவருகிறோம்; ஆனாலும் எங்களுடைய கோரிக்கைகளை உதாசீனம் செய்யும்படியாக இந்திய மீனவர்கள் எமது கடல் பரப்புக்குள் நுழைகின்றனர். இதனால் கைதுகள் இடம்பெறுகின்றன; நாங்கள் தமிழக மீனவர்களுடன் இதைப்பற்றி பேச விரும்புகின்றோம் என்று தொடர்ந்து கூறிவந்தாலும் அந்த கோரிக்கையை அவர்கள் உதாசீனம்செய்து வருகின்றனர்.” என்று குறைகூறினார்.
குறிப்பாக, அண்மையில் மன்னார் கடல் பகுதியில் வந்து இந்திய தமிழக மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தியை இந்த முறைதான் இந்திய ஊடகங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன என்றும் அவர்களுடைய சொந்த நாட்டு ஊடகங்களாலேயே மன்னார் கடற்பரப்புக்குள் வந்து சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் ஆலம் குறிப்பிட்டார்.
எனவே, தடைசெய்யப்பட்ட இழுவைமடி வலைகளை அவர்கள் பயன்படுத்துவதையும் அத்துமீறுவதையும் அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என இலங்கை அரசுக்கும் எமது கடற்படைக்கும் வலியுறுத்தி வருகிறோம்; ஆனாலும் இந்திய தமிழக மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் ஊடகத்தினரிடம் ஆலம் கூறினார்.