இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தலில் அரசியல் கட்சிகள், பொதுமக்கள் அமைப்புகள் சார்பில் கூட்டாக பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதாவது, ஏழு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் பொதுமக்கள் அமைப்புகளை உள்ளடக்கிய தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரதிநிதிகளும் தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்பு எனும் பெயரில் ஒருங்கிணைந்துள்ளனர்.
இலங்கை போருக்குப் பின்னர் முதல் முறையாக, பொது மக்களின் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் சேர்ந்த ஒரு முயற்சியாக இது கையிலெடுக்கப்பட்டுள்ளது.
இதன் சார்பில், இலங்கையின் ஈழத்தமிழர் பூர்வீகப் பகுதியான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொதுவான ஒருவரை நிறுத்துவதற்கான பல கட்டப் பேச்சுகள் நடைபெற்றன. இறுதியாக, தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே.வி. தவராசா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் ஆகியோரின் பெயர்கள் விவாதிக்கப்பட்டன.
பின்னர் ஒருமனதாக முன்னாள் எம்.பி.யான அரியநேத்திரனைப் பொதுவேட்பாளராக நிறுத்துவது எனும் முடிவை தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிறீகாந்தா இன்று காலையில் யாழ்ப்பாணத்தில் ஊடகத்தினரிடம் அறிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், விடுதலைப்புலிகளின் காலத்திலேயே கூட்டமைப்பின் சார்பில் அரசியலில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.