இலங்கை அதிபர் தேர்தல் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் 2019இல் நடைபெற்ற தேர்தலில் கோட்டாபய இராஜபக்சே, அதிபராக வெற்றிபெற்றார். 2022 ஆம் ஆண்டில் இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. அதையடுத்து முதலில் பிரதமர் மகிந்தவும் பின்னர் அதிபர் கோட்டாபய இராஜபக்சேவும் பதவி விலகினர்.
மக்களின் பேரெழுச்சியால் அதிபர் மாளிகை தீக்கிரையாக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து படை விமானம் மூலம் நாட்டைவிட்டே கோட்டாபய தப்பியோடவேண்டியதாயிற்று. மாலத்தீவு போய் அங்கு தங்கமுடியாமல் சிங்கப்பூருக்குச் சென்ற அவர், அங்கிருந்துதான் தன் விலகல் கடிதத்தை அனுப்பினார்.
மகிந்தவுக்குப் பதிலாக பிரதமராக்கப்பட்ட இரணில் விக்ரமசிங்கே அதிபராகவும் ஆக்கப்பட்டார்.
இந்தியா உட்பட பல நாடுகளின் உதவியால் அந்த நாடு நொடித்துப்போன நிலையிலிருந்து மீண்டு வருகிறது.
அதிபரின் பதவிக்காலம் வரும் நவம்பர் 17ஆம் தேதியுடன் முடிவடைவதால், அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் அடுத்த அதிபர் தேர்தலுக்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும்.
இந்த வார இறுதிக்குள் அறிவிப்பு வெளியிடப்படும் என வாரத் தொடக்கத்தில் அறிவித்திருந்த இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு, இன்று முற்பகலில் அதிபர் தேர்தலுக்கான அறிவிக்கையை அரசிதழில் வெளியிட்டது.
அதன்படி, செப்டம்பர் 21ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும். ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் வேட்புமனுக்கள் ஏற்கப்படும்.
தீவு நாடான இலங்கையில் 2.2 கோடி மக்கள்தொகையில் 1.7 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.