இலங்கை நாடாளுமன்றத்தின் பத்தாவது தேர்தல் நாடு முழுவதும் இன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.
அதையடுத்து, வாக்குப்பெட்டிகள் எண்ணும் மையங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டு வருகின்றன.
வாக்கு எண்ணிக்கை தொடங்கி இரவு 10 மணிவாக்கில் முதல் கட்ட முடிவு வெளியிடப்படும் என்று இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் இரத்நாயக்கா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முதல் கட்டமாக அஞ்சல் வாக்குகள் எண்ணும் பணி மாலை 4.30 மணிக்குத் தொடங்கியுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்தமுள்ள 225 இடங்களில் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் 196 உறுப்பினர் பதவிகளுக்காக 8 ஆயிரத்து 352 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் 5,006 பேர். 3,346 பேர் சுயேச்சைக்குழுக்களின் வேட்பாளர்கள் ஆவர்.
நாட்டில் ஒரு கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 வாக்காளர்கள் இவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் அவ்வளவு பேரும் வாக்களிக்கவில்லை. துல்லியமான விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.