இலங்கையில் அடுத்த மாதம் 21ஆம்தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை அந்நாட்டு தேர்தல் பணிகள் ஆணைக்குழு மும்முரமாக மேற்கொண்டுவருகிறது.
முன்னணி வேட்பாளர்களைப் பொறுத்தவரை, தற்போதைய அதிபர் இரணில் விக்கிரமசிங்கே சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்குவேன் எனக் கூறியிருந்ததுடன், அதற்கான கட்டுப்பணத்தையும் செலுத்திவிட்டார்.
அவரைத் தொடர்ந்து, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவருமான சஜித் பிரேமதாசாவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். அவரின் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரா தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று கட்டுப்பணத்தைச் செலுத்தினார்.
பழைய சிங்கள இடதுசாரி அமைப்பான ஜேவிபி சார்ந்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசநாயக்காவும் நாளைக்குள் தன் கட்டுப்பணத்தைச் செலுத்துவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.