இலங்கை அதிபர் தேர்தலுக்கான போட்டி சூடுபிடித்துள்ள நிலையில், முன்னாள் அதிபர் மகிந்த இராஜபக்சேவின் மகன் நாமல் இராஜபக்சே போட்டியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 21ஆம் தேதி நடைபெறவுள்ள இலங்கை அதிபர் தேர்தலில், இதுவரை மூன்று முன்னணி வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். மக்கள் எழுச்சியால் பதவியைவிட்டு விலகியும் நாட்டைவிட்டுத் தப்பியும்போன இராஜபக்சே சகோதரர்களே நாட்டின் நெருக்கடிக்குக் காரணம் என மக்கள் மத்தியில் கடுமையான கோபம் இருந்துவருகிறது.
இதனிடையே, அவர்கள் குடும்பத்தின் ஆதரவுடன் பிரதமராகவும் பின்னர் அதிபராகவும் ஆன ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் இரணில் விக்கிரமசிங்கே மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இராஜபக்சேக்கள் குடும்பத் தலைமையிலான இலங்கை பொது மக்கள் முன்னணி (சிறிலங்கா பொதுஜன பெரமுனா) சார்பில் பிரபல கொழும்பு தொழிலதிபர் தம்மிக பெரேரா என்பவரை அறிவித்திருந்தார்கள்.
ஆனால், மற்ற வேட்பாளர்களான இரணில், எதிர்க்கட்சித் தலைவர்களான சஜித் பிரேமதாசா, அனுரகுமார திசநாயக்கா ஆகியோர் நாடு முழுவதும் தீவிரப் பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டிவரும்நிலையில், தமிக்க சார்பில் பிரச்சாரமே தொடங்காதபடியாகத்தான் நிலைமை இருந்தது. இராஜபக்சேக்கள் குடும்பத்தின் உள்குத்து காரணமாகவே, இப்படி நடப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறிவந்தனர். முன்னதாக, இரணில் அதிபராவதற்கு நாமலை பிரதமராக ஏற்கவேண்டும் என நிபந்தனை விதித்ததை, அவர் ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்தப் பின்னணியில், இன்று காலை கொழும்பில் கூடிய மொட்டுச் சின்னத்தைக் கொண்ட இலங்கை பொதுமக்கள் முன்னணியின் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் இராஜபக்சே அறிவிக்கப்பட்டார்.
அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் முறைப்படி இதை அறித்தார். அப்போது, நாமலின் தந்தையும் கட்சித் தலைவருமான மகிந்த, நிறுவனரான சித்தப்பா பசில் ஆகியோரும் உடனிருந்தனர்.
ஒருவழியாக, அதிபர் தேர்தலில் இராஜபக்சேக்களின் நாடகம் முடிவுக்கு வந்ததாகவே இலங்கை அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.