இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியானதில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசநாயக்கா முதலில் 50% வாக்குகளுடன் முற்பகல்வரை முன்னிலையில் இருந்தார். பிறகு படிப்படியாக அவரின் வாக்கு சதவீதம் குறையத்தொடங்கி மதியம்வாக்கில் 40%க்கும் குறைவாக மாறியது.
தற்போதைய நிலவரப்படி, அனுரகுமாரவுக்கு 39.45 சதவீதம் வாக்குகளும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு 34.32 சதவீதம் வாக்குகளும் கிடைத்துள்ளன. தற்போதைய அதிபர் இரணில் விக்கிரமசிங்கேவுக்கு 17.47 சதவீதமும் தமிழ்ப் பொதுக் கட்டமைப்பின் வேட்பாளர் அரியநேத்திரன் 3.05 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.
எந்த வேட்பாளரும் 50 சதவீதம் வாக்குகள் பெறாதநிலையில் இரண்டாம் சுற்றாக, இலங்கை முறைப்படி வாக்காளர்கள் அளித்த விருப்ப வாக்குகள் எண்ணப்படும் என அந்நாட்டுத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதில், சிங்களவர், மலையகத் தமிழர், முஸ்லிம் ஈழத்தமிழர்கள், முஸ்லிம் அல்லாத ஈழத்தமிழர்கள் என பல்வேறு வகைகளில் விருப்ப வாக்குகள் அளிக்கப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. எனவே, இரண்டாம் சுற்று முடிவு எப்படி இருக்கும் என்பதைத் தீர்மானிப்பது கடினமாகியுள்ளது.
சிங்களவர்களில் முதல் வாக்காக அனுரவுக்கு செலுத்தியவர்கள், இரண்டாவது விருப்ப வாக்காக சஜித்துக்கே செலுத்தியிருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. பெரும்பாலான தமிழர் பகுதிகளிலும் சஜித்துக்கான ஆதரவு விருப்ப வாக்கில் வெளிப்படக்கூடும். இரணிலுக்கான ஆதரவு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்பதால் சஜித்துக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.