இலங்கையின் தோட்டத்தொழிலாளர்கள் வசிக்கும் மலையகப் பகுதியில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் ஏராளமானவர்கள் 200 ஆண்டுகளாக இருந்துவருகின்றனர். இந்தப் பகுதியிலிருந்து முதல் முறையாக மலையகத் தமிழர் பெண்கள் இருவர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது தமிழ் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு பேருமே அதிபர் அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்டவர்கள் ஆவர்.
நுவரெலியா மாவட்டத்தில் கலைச்செல்வி என்பவர் 33 ஆயிரத்து 346 வாக்குகளைப் பெற்று எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பதுளை மாவட்டத்தில் அம்பிகா சாமுவேல் 58 ஆயிரத்து 201 வாக்குகளுடன் வெற்றிபெற்றுள்ளார்.
இலங்கையின் தேர்தல் அரசியலில் 1977ஆம்ஆண்டு முதல் மலையகத்தமிழர்கள் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர் என்றாலும், பெண்கள் எம்.பி.யாகி இருப்பது இதுவே முதல் முறை.