இலங்கையின் வரலாற்றில் அரசாங்கத்தை எதிர்த்து ஆயுதப் போராட்டம் நடத்திய மக்கள் விடுதலை முன்னணி (ஜனதா விமுக்தி பெரமுன -ஜேவிபி)யிலிருந்து ஒருவர் நாட்டின் அதிபராகிறார்.
முன்னாள் அதிபர் கோட்டாபய ஆட்சிக்கு எதிராக தலைநகர் கொழும்பில் தொடங்கிய அறகலய போராட்டத்துக்குப் பின்னணியில் இருந்து செயல்பட்டதில், இந்தக் கட்சியின் பங்கு முக்கியமானது. அதிலிருந்தே ஜேவிபிக்கு நாடளவில் குறிப்பாக சிங்களர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்தது.
இராஜபக்சே குடும்ப ஆட்சிக்கு எதிரான மனநிலையில் இருந்த மக்களுக்கு ஜேவிபி தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அனுரகுமார திசநாயக்காவுக்கு ஆதரவு பெருகியது.
நாடு முழுவதும் அவருடைய பிரச்சாரக் கூட்டங்களில் மக்கள் வெள்ளமெனத் திரண்டனர். ஆனால் ஈழத்தமிழர்களின் தாயகப் பகுதியான வடக்கு-கிழக்கு மாகாணங்களில் அப்படி இல்லை.
இந்த நிலையில், நேற்று மாலையில் அஞ்சல் வாக்குகள் எண்ணத் தொடங்கியதிலிருந்தே அனுரகுமார முன்னிலையில் இருந்தார்.
பிறகு, மாவட்டவாரியான வாக்குகளிலும் முதலில் அறிவிக்கப்பட்ட காலி மாவட்டத்தில் அனுரவே அதிக வாக்குகளைப் பெற்றார்.
அதே நிலை தொடர்ந்த நிலையில், நள்ளிரவு 2 மணியளவில் வெளியிடப்பட்ட முடிவில், அனுரகுமார 58 சதவீத வாக்குகளையும் இரணில் விக்கிரமசிங்கே 19 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
ஒரு வேட்பாளர் 50 சதவீதம் பெற்றுவிட்டால் அவரே வெற்றிபெறுவார், எனவே அனுரவின் வெற்றி உறுதியானது.
காலை 7.30 மணி நிலவரப்படி அனுர 52%, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா 23.86%, இரணில் விக்கிரமசிங்கே 16.84%, மகிந்த இராஜபக்சேவின் மகன் நாமல் 2.94% வாக்குகளைப் பெற்றுள்ளனர்.