இலங்கையில் அதிபர் தேர்தலைத் தொடர்ந்து வரும் நவம்பர் 14ஆம் தேதியன்று அந்நாட்டு நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளில் கட்சிகள், கட்சிக் குழுக்கள் ஈடுபட்டுவருகின்றன.
பழைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்த கட்சிகள் மீண்டும் இணைந்து போட்டியிட வருமாறு அதன் மையக் கட்சியான தமிழரசுக் கட்சி சார்பில் சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனிடையே, கூட்டமைப்பின் முன்னாள் உறுப்புக் கட்சிகளின் தலைவர்களுடன் இந்திய உயர் ஆணையர் சந்தோஷ் ஜா, நேற்று திங்களன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
கொழும்பில் உள்ள அவரின் இல்லத்தில் நேற்று பிற்பகல் தொடங்கி மாலைவரை இப்பேச்சு நீடித்தது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, பிளாட்தலைவர் சித்தார்த்தன், டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈபிஆர்எல்எஃப் சுரேஷ் பிரேமச்சந்திரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
தாங்கள் கூட்டமைப்பில் இல்லாதபோதும் ஒன்றாகப் போட்டியிடவே விரும்புவதாக அவர்கள் இந்தியத் தூதரிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தோஷ் ஜாவை அவரின் இல்லத்தில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் நேற்று சந்தித்துப் பேசினார்.