இலங்கையின் அதிபர், பிரதமர் பதவிகளிலிருந்து பதவிவிலகி ஒதுங்கிய இராஜபக்சே குடும்பம், வரக்கூடிய அதிபர் தேர்தலை முன்னிட்டு மீண்டும் அதிகாரத்தில் தலைதூக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர், சஜித் பிரேமதாசா. ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவராக இருக்கிறார். முன்னதாக, இவர் இப்போதைய அதிபர் இரணில் விக்கிரமசிங்கேவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தார். அதிபர் தேர்தல் தோல்விக்குப் பிறகு அமைதியாக இருந்த ரணில், கட்சியிலும் முன்னணிக்கு வராமல் ஒதுங்கியிருந்தார். ஆனால், தேசியப் பட்டியல் எனும் முறை மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக ஆனார். இடையில் இராஜபக்சேக்களின் சரிவால் முதலில் பிரதமர் வாய்ப்பும், அடுத்து அதிபர் வாய்ப்பும் தேர்தலே இல்லாமல் அவருக்குக் கிடைத்தது.
இரண்டு ஆண்டுகளாக அதிபராக இருந்த ரணிலுக்கு எப்பாடுபட்டேனும் அதிபர் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பது திட்டம். முன்னாள் பிரதமரின் மகனான சஜித் பிரேமதாசாவுக்கும் இது நெடுங்கால ஆசை!
இவர்களுடன் சேர்த்து, ஜேவிபியின் தேசிய மக்கள் சக்தி தலைவர் குமாரும் அதிபர்தேர்தல் வேட்பாளராக நாடு முழுவதும் சுற்றிவருகிறார்.
சந்திரிகா குடும்பத் தலைமையில் இருந்துவந்த இலங்கை சுதந்திரக் கட்சியின் மகிந்த ராஜபக்சே இரண்டாவது முறை தேர்தலில் அதிபரான பிறகு இலங்கை பொதுமக்கள் முன்னணி என தனிக் கட்சியைத் தொடங்கினார். அதன் தேர்தல் சின்னம் தாமரை மொட்டு என்பதால், மொட்டு கட்சி என்றும் அழைக்கப்படுகிறது. சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் அதிபர் மைத்திரி பால சிறீசேனா மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனக் கூறிவிட்டநிலையில், இராஜபக்சேகளின் தரப்பும் போட்டியிடாமல் இரணிலுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆதரவு தெரிவிப்பது என்கிற நிலையை வெளிப்படுத்தி வந்தது.
ஆனால், இரணிலின் அண்மைய இந்தியப் பயணம், மகிந்தவின் அண்மைய சீனப் பயணத்துக்குப் பிறகு, தனியாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவது என மொட்டு கட்சி முடிவெடுத்துள்ளது.
சிங்களத் தொழிலதிபர் தம்மிக பெரேராவை அதிபராகவும் இராஜபக்சேக்களின் அடுத்த தலைமுறையும் மகிந்தவின் மகனுமான நாமல் இராஜபக்சேவை பிரதமராகவும் முன்னிறுத்த அந்தக் குடும்பம் தீர்மானித்துள்ளது.