இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒன்பதாவது அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நாளை மறுநாள் 21ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன என்று இலங்கை தேர்தல்கள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.
தேர்தலுக்கான பாதுகாப்புப் பணியில் காவல்துறையினருடன் முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் நிகால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற இலங்கை தேசிய பாதுகாப்பு அவையின் கூட்டத்தில் தற்போதைய அதிபர் இரணில் விக்ரமசிங்கே கலந்து கொண்டார். அதிபர் தேர்தலுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு முப்படையினருக்கும் அவர் உத்தரவிட்டார்.
வேட்பாளர்களின் பாதுகாப்பு, வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணிக்கை மையங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த அவர் வலியுறுத்தினார்.
இதே நேரம், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எந்தவித பாதிப்பு இல்லாமல் பணிகளை மேற்கொள்ளுமாறும் அவர் ஆலோசனை வழங்கினார்.
தேர்தலை முன்னிட்டு இலங்கை முழுவதும் நாளை வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வரும் திங்கட்கிழமை அனைத்து பள்ளிகளும் இயங்கும் என்றும் கல்வி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
இதனிடையே, ஒவ்வொரு தொகுதிகளிலும் நிறுவப்பட்டுள்ள அனைத்து கட்சிகளின் தேர்தல் அலுவலகங்களையும் இன்று நள்ளிரவுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் ரத்நாயக்கா கூறி இருக்கிறார்.