இலங்கையில் ஆடி உற்சவங்கள் கோலாகலம்- பிரதமர் பங்கேற்பு!

இலங்கை, கொழும்பு ஆடி வேல் திருவிழா
இலங்கை, கொழும்பு ஆடி வேல் திருவிழா
Published on

இலங்கையில் தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆடி மாதத்தை முன்னிட்டு பல்வேறு உற்சவங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன.

இலங்கையின் பூர்வீகத் தமிழரான ஈழத்தமிழர்கள், தலைநகர் கொழும்பில் வசிக்கும் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் என அனைத்துத் தமிழர் பகுதிகளிலும் ஆடி மாதம் பிறந்ததை முன்னிட்டு பாரம்பரிய நிகழ்வுகள் தொடங்கி வரிசையாக நடைபெற்றுவருகின்றன.

ஆடிக் கூழ் வார்த்தல் அதிகமாகக் கொண்டாடப்படும் வட தமிழ்நாட்டைப் போலவே, ஈழத்தமிழர் பகுதிகளில் கடந்த 17ஆம் தேதி புதன்கிழமையன்று கோயில்களில் ஆடிக் கூழ் வார்த்தல் நடைபெற்றது.

முருகன் கோயில்களில் ஆடிச் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பெறுகின்றன.

மன்னார் மாவட்டத்தில் மடு பிரதேசத்தில் தம்பனைக்குளம் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் புதன் காலை 8 மணி முதல் ஆடிப் பிறப்பு நிகழ்வு வடமாகாணக் கல்வி அமைச்சகத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது. ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை என்கிற பாடலை முத்துமாரிய அம்மன் கோயில் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் இசையோடு பாடினார்கள். மடு பிரதேச செயலக அதிகாரி பிரதீபன் ஆடிப்பிறப்பும் தமிழர் பாரம்பரியமும் என்கிற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். அதைத் தொடர்ந்து மாணவர்களின் நடனம், பேச்சு, கவிதை எனக் கலைத் திறன் நிகழ்வுகள் நடத்தப்பட்டு, பரிசுகளும் அளிக்கப்பட்டன.

இலங்கை காரை தீவு மாவடி கந்தசுவாமி கோயில் ஆடித் திருவிழா
இலங்கை காரை தீவு மாவடி கந்தசுவாமி கோயில் ஆடித் திருவிழா

காரை தீவு மாவடி கந்தசுவாமி கோயிலின் வருடாந்திர ஆடி மகா உற்சவத்தின் மிருகயாத்திரை எனப்படும் திருவேட்டை திருவிழா 18ஆம் தேதியன்று நடைபெற்றது.

பசறை நகரில் அம்மணிவத்தை கதிர் வேலாயுத சுவாமி கோயிலின் முத்தேர் பவனியும் மற்ற ஒன்பது முருகன் கோயில்களின் தேர்களும் ஒரே இடத்தில் சங்கமிக்கும் சிறப்புத் தேர்த் திருவிழா அன்று மாலை நடைபெற்றது.

கொழும்பு சம்மாங்கோடு கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் ஆடி வேல் விழா தேர் உலா நேற்று நடைபெற்றது. இது பம்பலப்பிட்டி சம்மாங்கோடு மாணிக்கப்பிள்ளையார் கோயிலை நோக்கிச் சென்றபோது, சுங்கத்துறை அலுவலகம், காவல்துறை தலைமையகம், இலங்கை மத்திய வங்கி, அதிபர் செயலகம் ஆகியவற்றைக் கடந்துசென்றது.

இலங்கை பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான அலறி மாளிகை முன்பாக பவனி சென்றபோது, பிரதமர் தினேஷ் குணவர்த்தனா பூசையில் கலந்துகொண்டார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com