இந்தியாவின் ஒரு மாநிலம் அளவுக்கு உள்ள இலங்கைத் தீவில் அதிபர் தேர்தலையொட்டி மிகவும் கறாராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. தேர்தல் சட்டத்தை மீறி ஒட்டப்பட்ட 66 இலட்சத்து 62 ஆயிரத்து 676 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. இத்துடன், 2 இலட்சத்து 19 ஆயிரத்து 203 சுவரொட்டிகளை காவல்துறையினர் கைப்பற்றி வைத்துள்ளனர்.
சட்டவிரோதமாக வைக்கப்பட்ட 1,609 பேனர்களும் அகற்றப்பட்டுள்ளன. 1,176 பேனர்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.
சட்டத்தை மீறி வைக்கப்பட்டிருந்த 1,613 கட் அவுட்டுகள் அக்கற்றப்பட்டதுடன், 1,632 கட் அவுட்டுகள் காவல்துறை வசம் எடுத்துக்கொள்ளப்பட்டன என்றும் காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் நிகால் தல்துவ ஊடகத்தினரிடம் தெரிவித்தார்.
தேர்தல் தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 108 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய 14 வாகனங்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.
அதிபர் தேர்தல் தொடர்பாக நேற்றுவரை 4,945 புகார்கள் வந்துள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.