உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியா இன்று மோதவுள்ள நிலையில், இதை கொண்டாடும் விதமாக சிறப்பு கவன ஈர்ப்பு சித்திரத்தை கூகுள் வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் 5-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டி, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவும், 2 முறை சாம்பியனான இந்தியாவும் மோதும் இந்த இறுதி ஆட்டம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஏற்கெனவே இதே உலகக் கோப்பை போட்டியில் 2003-ஆம் ஆண்டு தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியனானது. தற்போது மீண்டும் இதே கட்டத்தில் இரு அணிகளும் மோதவுள்ளன.
இந்தியா-ஆஸ்திரேலியா இறுதி ஆட்டத்தை நேரில் காண, பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்ட் மார்ல்ஸ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் அகமதாபாத் வருகின்றனர்.
இதுதவிர, இந்தியாவுக்காக உலகக் கோப்பை வென்ற கேப்டன்களான கபில் தேவ், எம்.எஸ்.தோனியுடன், சச்சின் டெண்டுல்கர் உள்பட கிரிக்கெட் நட்சத்திரங்களும் கலந்துகொள்கின்றனர்.
இந்த நிலையில், இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தை கௌரவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் சிறப்பு கவன ஈர்ப்பு சித்திரத்தை (டூடுல்) வெளியிட்டுள்ளது.