இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தொடர்ந்த வழக்கில், தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக சர்வதேச விளையாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதி ஆட்டத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தொடர்ந்த வழக்கில், தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக சர்வதேச விளையாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இறுதிப்போட்டி வரை சென்றதால் வெள்ளிப் பதக்கம் வழங்குவது தொடர்பாக தொடரப்பட்ட மனுவின் மீதான விசாரணை முடிந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆக. 16ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் வினேஷ் போகத் தரப்பில் சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, 3வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2024 ஒலிம்பிக் தொடரின் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத், காலிறுதி, அரையிறுதியை வெற்றிகரமாகக் கடந்த நிலையில், இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதன்மூலம் அவரின் ஒலிம்பிக் கனவு பறிக்கப்பட்டது.
50 கிலோ எடைப்பிரிவு போட்டியில் பங்கேற்க 53 கிலோ எடையிலிருந்த அவர், இரவு முழுவதும் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து 2.9 கிலோ எடையைக் குறைத்தார். அரையிறுதிப் போட்டியில் 49.9 கிலோ எடையில் இருந்த அவர், ஒருநாள் இரவில் எடுத்துக்கொண்ட சிறிய உணவில் 3 கிலோ வரை உடல் எடை அதிகரித்தது குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
இதனிடையே, ஒலிம்பிக் தொடரில் இறுதிப்போட்டி வரை வெற்றி பெற்றதால் வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என வினேஷ் போகத் தரப்பிலிருந்து சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு பெறுவதற்கு முன்பே தீர்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதித்தீர்ப்பு வழங்கப்படுவதற்கான கால அவகாசத்தை நேற்று வரை சர்வதேச விளையாட்டு நீதிமன்றம் நீட்டித்திருந்தது.
இந்நிலையில், ஆகஸ்ட் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதன்மூலம் 3ஆவது முறையாக வினேஷ் போகத் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.