மல்யுத்தம்: 100 கிராம் கூடுதலாக இருந்ததால் வினேஷ் போகத் தகுதி நீக்கம்!

வினேஷ் போகத்
வினேஷ் போகத்
Published on

மல்யுத்த இறுதிப் போட்டியில் தங்கம் வென்று சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார் இந்திய வீராங்கனை வினேஷ் போகத். இவர் எப்படியும் ஒரு பதக்கத்தை தட்டித்தூக்குவார் என பலரும் எதிர்பார்ப்போடு இருந்தனர்.

இந்த நிலையில், வினேஷ் போகத் கூடுதலாக 100 கிராம் எடை இருந்ததாகக் கூறி அவரை ஒலிம்பிக் அமைப்பு தகுதி நீக்கம் செய்துள்ளது.

நேற்றைய காலிறுதி போட்டியில் சரியாக 50 கிலோ இருந்த வினேஷ் போகத், நேற்று இரவு 2 கிலோ அதிகரித்துள்ளார். இதனால், உடல் எடையை குறைக்க இரவு முழுவதும் தூங்காமல் பல்வேறு உடற்பயிற்சிகளை செய்துள்ளார். இருப்பினும் அவரால், உடல் எடையை சரியாக 50 கிலோவுக்கு கொண்டு வரமுடியவில்லை.

வினேஷ் போகத்தின் உடல் எடையில் 100 கிராமை குறைக்க இந்தியத் தரப்பிலிருந்து கால அவகாசம் கேட்கப்பட்ட நிலையில், ஒலிம்பிக் அமைப்பு மறுத்து, அவரை தகுதி நீக்கம் செய்துள்ளது. இதனால் ஒரு பதக்கம் கூட அவரால் வெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று இரவு இறுதிப்போட்டி நடைபெற இருந்த நிலையில், வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது இந்திய ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்ற வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது வருத்தம் அளிப்பதாக இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ,’வினேஷ், நீங்கள் சிறந்த வெற்றிவீரர்! ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையும் ஊக்கமும் அளிப்பவர். இப்போது நான் அடையும் வருத்தத்தை வெளிக்காட்ட வார்த்தைகள் இல்லை.

அதே சமயம் நீங்கள் கடினமான சூழல்களை எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்  என்பதை நான் அறிவேன்!

சவால்களை நேரடியாக எதிர்கொள்வது உங்கள் குணம். மீண்டும் வலிமையுடன் திரும்பி வாருங்கள்! நாங்கள் அனைவரும் உங்கள் பக்கம் நிற்கிறோம்!’ என பிரதமர் மோடி அவருக்கு ஆறுதல் கூறி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com