மன்னியுங்கள் அம்மா... மல்யுத்தம் வென்றுவிட்டது... அதிர்ச்சி விடைகொடுத்த வினேஷ் போகத்!

வினேஷ் போகத்
வினேஷ் போகத்
Published on

ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தப் போட்டியில் முதல் முறையாக தங்கப் பதக்கத்தை எட்டிய வினேஷ் போகத், அதிர்ச்சி அறிவிப்பாக மல்யுத்தத்திலிருந்தே விலகுவதாக தெரிவித்துள்ளார். 

இருபத்து ஒன்பது வயது வினேஷ் போகத் நேற்று புதன்கிழமை 50 கிலோ பிரிவில் தங்கப் பதக்கத்தை வெல்லும் நிலையை எட்டினார். 

அதையடுத்து திடீரென அவர் கூடுதலாக 100 கிராம் எடை இருப்பதாகக் கூறி, அவரைப் போட்டியிலிருந்து தகுதியிழப்பு செய்வதாக பன்னாட்டு ஒலிம்பிக் குழு அறிவித்தது. 

அதையடுத்து, முன்னதாக அரையிறுதியில் வினேஷிடம் தோல்வியடைந்த கியூப வீராங்கனை யூஸ்னிலிஸ் கஸ்மான் லோபஸ், அமெரிக்க வீராங்கனை சாரா ஆன் ஹில்டெப்ராண்டுடன் இறுதிப் போட்டியில் களமிறங்கினார். அதில் சாரா வெற்றிபெற்றார். 

இந்த நிலையில், ஒலிம்பிக் மேல்முறையீட்டுக் குழுவிடம், தனக்கு கூட்டு வெள்ளிப் பதக்கம் வழங்கவேண்டும் என வினேஷ் போகத் முறையீடு செய்துள்ளார். அதைப் பற்றிய முடிவு வெளியிடப்படும். 

இதனிடையே, தன்னுடைய அம்மாவைக் குறிப்பிட்டு, தன் எக்ஸ் பக்கத்தில் ஓய்வை அறிவித்த வினேஷ், " அம்மா, மல்யுத்தம் வெற்றி பெற்றிருக்கிறது. நான் தோற்றுப்போய்விட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள். உங்களின் கனவுகள், என்னுடைய துணிவு, எல்லாமும் நொறுங்கிப்போய்விட்டன. மேற்கொண்டு என்னிடம் சக்தி இல்லை. 2001-24 மல்யுத்தக் களத்துக்கு விடைகொடுக்கிறேன். உங்கள் அனைவருக்கும் கடன்பட்டவள் நான். மன்னியுங்கள்.” என்று இரண்டு முறை உலக சாம்பியன் பட்டத்தையும் ஒரு முறை ஒலிம்பிக் வெண்கலப் பதக்கத்தையும் பெற்ற சாதனையாளர் வினேஷ் போகத் சோகத்துடன் குறிப்பிட்டுள்ளார்.  

ஆசிய, காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற வினேஷ் போகத், இதுவரை மூன்று முறை ஒலிம்பிக்கில் கலந்துகொண்டுள்ளார். இந்த முறை வெள்ளியை உறுதிசெய்து தங்கத்தை நோக்கி தன் திறனைத் தயாராக வைத்திருந்தவருக்கு விதியோ சதியோ என பெரும் அவலத்தைத் தந்துவிட்டது, இந்திய விளையாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com