குதிரைக்கு ஸ்பெஷல் தீவனம், சீன டேபிள்... இந்திய ஒலிம்பிக் அணியாப்பா இது?

குதிரைக்கு ஸ்பெஷல் தீவனம், சீன டேபிள்... இந்திய ஒலிம்பிக் அணியாப்பா இது?
Published on

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான ஏற்பாடுகளை இந்தியா செய்து வருகிறது. 

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் இன்னும் சில நாள்களில் தொடங்க உள்ள நிலையில், இந்திய வீரர்கள் அடுத்த ஓரிரு வாரங்களில் அங்குச் செல்ல உள்ளனர்.  

ஜெர்மனியில் பேட்மிட்டன் வீரர்கள் தங்குவதற்கான இடம் முதற்கொண்டு, குதிரையேற்ற போட்டியில் கலந்துகொள்ளும் குதிரைகளுக்கான உணவு வரை எப்படி இருக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு விஷயங்களை இந்தியன் மிஷன் ஒலிம்பிக் செல் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்காக பி.வி. சிந்துவிற்கு 12பேர் கொண்ட குழு ஒன்று ஜெர்மனியில் உள்ள பயிற்சி முகாமில் பயிற்சி அளித்து வருகிறது. 

டேபிள் டென்னிஸ் வீரர் மணிகா பட்ரா பயிற்சி பெற, ஒலிம்பிக் போட்டியில் பயன்படுத்தப்படும் அதே டேபிளை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

குதிரையேற்ற வீரர் அனுஷ் அகர்வாலாவின் குதிரைக்காகச் சிறப்பு உணவு, சேணம், பூட்ஸ், போர் போன்ற பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இந்தியன் மிஷன் ஒலிம்பிக் செல்லில் முன்னாள் ஒலிம்பிக் வீரர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பொதுவாக இப்படியான குழுவை அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள்தான் அமைக்கும். ஆனால், இந்த முறை இந்தியாவும் செய்திருப்பது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

2021 ஆம் ஆண்டிலிருந்தது தற்போது வரை ரூ. 21 கோடி செலவு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு ஒதுக்கப்பட்ட தொகையைவிட இரண்டு மடங்கு அதிகமாகும்.

இப்படியான வசதி வாய்ப்புகளை, நிதி ஒதுக்கீட்டை செய்து கொடுக்கும் இந்திய விளையாட்டு துறை முன்பு இப்படியெல்லாம் செய்தில்லை.

ஒலிம்பிக் சின்னம்
ஒலிம்பிக் சின்னம்

2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் தொடங்குவதற்கு இரண்டு வாரங்கள் இருந்தபோது, தனக்கு ஷீ வாங்க பணம் இல்லையென டூட்டி சந்த் பொது இடத்தில் கதறி அழுதார். அதன் பிறகே, இந்தியாவின் விளையாட்டு துறை அதிகாரிகள் அவருக்கு ஷீ வாங்கப் பணம் அனுப்பினர்.

அதேபோல், 2012 ஆம் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற மேரி கோம், வெளிநாட்டு பயிற்சியாளரை பணியமர்த்தவும் வெளிநாட்டில் பயிற்சி பெறுவதற்காகவும் புரவலர்களையே நம்பி இருந்தார்.

துப்பாக்கிச் சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா, 2006ஆம் ஆண்டு பயிற்சி பெறுவதற்கும் உபகரணங்கள் வாங்குவதற்கான நிதி கேட்டு விளையாட்டுத் துறை அதிகாரிகளைச் சென்று சந்தித்துள்ளார். ஆனால், ஏமாற்றம்தான் ஏற்பட்டதாக தன்னுடைய சுயசரிதை புத்தகத்தில் அவர் எழுதியுள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் நிறைய பதக்கம் வெல்ல வேண்டும் என்பதற்காக இப்படியான முயற்சிகளை இந்தியாவின் விளையாட்டு துறை எடுத்து வருவது வரவேற்கத்தக்கது என்கிறனர் விளையாட்டு ஆர்வலர்கள். 

ஆழமான கட்டுரைகள், சுவாரசியமான செய்திகளுக்கு அந்திமழையை வாசியுங்கள்

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின் தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com