ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்
ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்

டி20: ஆப்கான் அணி நிகழ்த்திய பழிக்குப் பழி!

Published on

ஆஸ்திரேலியா இன்று காலை மேற்கிந்திய தீவுகளில் உள்ள கிங்ஸ்டனில் கால் வைத்த நேரம் சரியில்லை போலிருக்கிறது. டாஸ் வென்று பேட்டிங் வென்றால்தான் நல்லது என்ற கருத்து இருந்தபோதும் சொத்தை அணியான ஆப்கானிஸ்தானை எளிதாக வென்று விடலாம் என்று பவுலிங்கை தேர்வு செய்தார்கள். கடைசியில் அவர்களுக்கே ஆப்பாக அது முடிந்துவிட்டது. ஆப்கன் அணியிடம் ஒரு வரலாற்றுத் தோல்வியை வாங்கி இருக்கிறார்கள்.

முதலில் ஆடிய ஆப்கன் அணி 146 ரன்களைக் குவித்தது. அதன் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரை சதம் அடித்திருந்தனர். இந்த மைதானத்தில் பந்துவீச்சு அதுவும் எப்படிப்போட்டாலும் ஆடுவதற்கு சிரமம். மிகக் கவனமாக தட்டித் தட்டி ஆடவேண்டும். ஆனால் ஆஸி அணியினர்தான் வெற்றித் தலைக்கனத்தில் இருந்தனரே… மூன்று பந்துகளை ஆடிய நிலையில் தொடக்க ஆட்டக்காரர் ட்ராவிஸ் ஹெட், நவீன் பந்துவீச்சில் க்ளீன் போல்ட் ஆனதில் அவர்களின் சரிவு தொடங்கிற்று. ஆப்கன் ஆல்ரவுண்டர் நயீப் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸி அணியில் ஆப்கானை எதிர்த்து நின்று நம்பிக்கை அளித்தவர் கிளென் மேக்ஸ்வெல். கடந்த ஆண்டு உலகக்கோப்பையில் மேக்ஸ்வெல் நடத்திய சாகசம் ஞாபகம் வந்திருக்கலாம். ஆனால் 59 ரன்களுடன் அவரை அவுட் ஆக்கி பழிக்கு பழி தீர்த்தனர் ஆப்கானியர்கள். ஆக, 127 ரன்களுக்கு ஆஸி சுருண்டது.

நயீப்தான் மேன் ஆப் தி மேட்ச். இந்நிலையில் சூப்பர் 8-இல் ஆப்கானிஸ்தான் செமி பைனல் போவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. எத்தனை ரன்னில் பங்களாதேசை தோற்கடிக்கவேண்டும், இந்தியா- ஆஸி ஆட்டம் எப்படிப் போகவேண்டும் என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

இன்றைய நாள் ஆப்கன் ரசிகர்களுக்குக் கொண்டாட்டமான நாள்தான்! இது அப்செட் வெற்றி அல்ல; ஆப்கன் இன்று நன்றாக விளையாடினார்கள் என்றே விமர்சகர்கள் கூறுவது அவர்களை மேலும் உற்சாக்ப் படுத்தி உள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com