ரோகித் சர்மா
ரோகித் சர்மா

ரோகித் சர்மா அதிரடி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

Published on

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. ஆப்கானிஸ்தான் அணியின் ஹஷ்மதுல்லா ஷஹிதி, அஸ்மதுல்லா ஒமர்ஜாய் ஆகியோர் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். ஹஷ்மதுல்லா ஷஹிதி 80 ரன்னும், அஸ்மதுல்லா ஒமர்ஜாய் 62 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்களை எடுத்துள்ளது.

இந்திய அணி சார்பில் பும்ரா 4 விக்கெட்டும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டும், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 273 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது

தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷன் களமிறங்கினர். தொடக்கம் முதல் ரோகித் அதிரடியாக ஆடினார். இஷான் கிஷன் மறுமுனையில் நிலைத்து ஆடினார்.

தொடர்ந்து அதிரடி காட்டிய ரோகித் சர்மா அரைசதம் அடித்தார். 63 பந்துகளில் சதம் அடித்த அவர், 84 பந்துகளில் 131 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .

இவருடன் களமிறங்கிய இஷான் கிஷன் 47 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி அரைசதம் அடித்தார். இவருடன் ஆடிய ஸ்ரேயஸ் அய்யர் தன் பங்கிற்கு அதிரடி ஆட்டத்தை ஆடினார்.

இதன் மூலம் இந்திய அணி 35 ஓவர்கள் முடிவில் 273 ரன்களை குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டி முடிவில் விராட் கோலி 55 ரன்களையும், ஸ்ரேயஸ் அய்யர் 25 ரன்களையும் குவித்தனர். இந்திய அணிக்கு இது 2வது வெற்றியாகும் .

logo
Andhimazhai
www.andhimazhai.com