உலகக் கோப்பைக்கான இந்திய அணி: அக்சர் பட்டேலுக்கு பதில் அஷ்வின் ஏன் முக்கியம்?

ரவிச்சந்திரன் அஷ்வின்
ரவிச்சந்திரன் அஷ்வின்
Published on

ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடது கை சுழற்பந்துவீச்சாளர் அக்சர் பட்டேலுக்கு பதிலாக ஆப் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஷ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ளது. இதற்காக 9 நாடுகளைச் சேர்ந்த அணியினரும் இந்தியாவுக்கு வந்தடைந்தனர். நேற்று மாலை அனைத்து அணிகளும் 15 பேர் கொண்ட வீரர்களை அறிவித்தது. அதில், இந்திய அணியின் தரப்பில் அக்சர் படேல் நீக்கப்பட்டு ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த மாதம் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது, அஷ்வின் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாகத் தேர்வுக் குழு அக்சர் பட்டேலைத் தேர்வுசெய்திருந்தது.

இதற்கிடையே, ஆசியக் கோப்பை தொடரில் விளையாடிய அக்சர் பட்டேல் காயமடைந்தார். அவருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட், ”அணியில் எந்த மாற்றமும் இல்லை” என்றார். ஆனால், காயம் காரணமாக அக்சர் பட்டேல் அணிக்குத் திரும்புவது சாத்தியம் இல்லாமல் இருந்தது.

“அஷ்வின் பந்துவீசும் ஸ்டைலையும் அனுபவத்தையும் நம்மால் பறித்துவிட முடியாது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் நன்றாகவே பந்து வீசினார். ஒருவேளை மாற்று வீரராக அவர் அணியில் சேர்க்கப்பட்டால் நிச்சயம் அணிக்கு பலனளிக்கும்.” என ரோகித் சர்மா கடந்த சில நாள்களுக்கு முன்னர் பேட்டி அளித்திருந்தார்.

இந்த நிலையிலேயே, அக்சர் பட்டேலுக்கு பதில் அஷ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதன் மூலம், இந்திய அணி 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றபோது, அந்த அணியிலிருந்த விராட் கோலியும் அஷ்வினும் இந்த உலகக் கோப்பை தொடரிலும் இடம்பெறுகின்றனர்.

அஷ்வின் இரண்டு உலகக் கோப்பை தொடரில் விளையாடிய அனுபவம் உடையவர். 2011ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்றபோது அஷ்வின் அதில் முக்கிய இடம் பிடித்திருந்தார். அந்தத் தொடரில் அஷ்வின் இரண்டு போட்டிகளில் விளையாடி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் எட்டு போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் அவர் விளையாடவில்லை.

115 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளவர், அஷ்வின். தற்போது இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களில் இவர் மட்டுமே சிறப்பான ஆஃப் ஸ்பின்னர். இதனால் அஷ்வினுடைய அனுபவம் இந்திய அணிக்கு நிச்சயம் கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி வீரர்கள்

ரோகித் சர்மா (அணித் தலைவர்)

சுப்மன் கில்

விராட் கோலி

ஸ்ரேயாஸ் ஐயர்

கே.எல்.ராகுல்

இஷான் கிஷான்

சூர்யகுமார் யாதவ்

ஹர்திக் பாண்டியா

ஜடேஜா

குல்தீப் யாதவ்

அஷ்வின்

ஷர்துல் தாக்கூர்

பும்ரா

முகமது சமி

முகமது சிராஜ்

logo
Andhimazhai
www.andhimazhai.com