பாரிஸ் பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் முதலிடம் பிடித்த ஈரானிய வீரர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், இரண்டாம் இடம் பிடித்த இந்தியாவின் நவ்தீப் சிங் தங்கப்பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் (எப்41) இறுதிப் போட்டியில் இந்தியாவின் நவ்தீப் சிங் பங்கேற்றார். அதிகபட்சமாக 47.32 மீட்டர் தூரம் எறிந்த நவ்தீப், 2ஆவது இடத்தை உறுதி செய்தார்.
அதிகபட்சமாக 47.64 மீட்டர் எறிந்து முதலிடத்தை கைப்பற்றிய ஈரானின் பீட் சாயா சதேக், ஈரானின் தேசிய கொடியை காட்டியதற்காக போட்டி முடிந்த பின் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால், இரண்டாவது இடம் பிடித்த நவ்தீப் தங்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டார். ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வெல்வது இந்தியாவுக்கு இதுவே முதல் முறை.
அதேபோல், பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தின் (டி12) இறுதிப் போட்டியில் இந்தியாவின் சிம்ரன் சர்மா பங்கேற்றார். பார்வை குறைபாடுள்ள இவருக்கு உதவியாளராக அபய் சிங் பங்கேற்றார். இலக்கை 24.75 வினாடியில் கடந்த சிம்ரன், வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இது, பாராலிம்பிக்கில் இவரது முதல் பதக்கம். கியூபாவின் துராந்த் எலியாஸ் ஒமாரா (23.62 வினாடி), வெனிசுலாவின் பவுலா (24.19 வினாடி) முறையே தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
ஆண்களுக்கான குண்டு எறிதல் (எப்57) இறுதிப் போட்டியில் இந்தியா சார்பில் ஹோகடோ செமா, சோமன் ராணா பங்கேற்றனர். இதில் அதிகபட்சமாக 14.65 மீட்டர் எறிந்த ஹோகடோ செமா, வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இது, பாராலிம்பிக்கில் இவரது முதல் பதக்கம். இதன் மூலம் இந்தியா வென்றுள்ள பதக்கங்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலத்துடன் இந்தியா 16 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
பாரிஸ் பாராலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கியது. 168 நாடுகளை சேர்ந்த 4,400 வீரர்கள் பங்கேற்றனர். 12 நாள் விளையாட்டு திருவிழா இன்று நிறைவு பெறுகிறது. பாரிசில் நிறைவு விழா நடக்க உள்ளது. வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு, ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் இடம் பெறும். அடுத்த பாராலிம்பிக் போட்டி வரும் 2028இல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடக்க உள்ளது.