ஹைதராபாத் கிரிக்கெட் சங்க முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் கடந்த 2019 முதல் 2023-ம் ஆண்டு வரை ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக பதவி வகித்தார். அப்போது அவர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
அதாவது ஐதராபாத்தில் உள்ள உப்பல் ராஜீவ் காந்தி மைதானத்திற்கு தேவையான தீயணைப்பு சாதனங்கள் அமைக்கப்பட்டது மற்றும் கூடாரம் அமைத்தல் போன்ற பணிகள் செய்யப்பட்டதில் ரூ. 20 கோடி வரை முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக முகமது அசாருதீன் மீது 4-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டது. இந்த புகாரை திட்டவட்டமாக மறுத்த முகமது அசாருதீன் தனது புகழை கெடுக்கவே இப்படி புகார் அளிகப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் இந்த 4 வழக்குகளில் 3 வழக்கில் முன்ஜாமீன் பெற்றார்.
இந்த நிலையில் தான் தற்போது முகமது அசாருதீனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நிதி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலத்தில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் கொடுக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சியில் இருக்கும் முகம்மது அசாருதீனுக்கு, அமலாக்கத்துறை முதல் முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. இன்று ஆஜராக வேண்டும் என்று சம்மனில் கூறப்பட்டு இருந்தது. எனினும், அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகாத அசாரூதின், கால அவகாசம் கோரியிருக்கிறார்.
முன்னதாக கடந்த நவம்பர் மாதம் தெலுங்கானாவில் 9 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த கத்தம் வினோத், ஷிவ்லால் யாதவ் மற்றும் அர்ஷத் ஆயூப் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையின் சோதனை நடைபெற்றது. ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில், தலைவர், துணைத்தலைவர், செயலர் ஆகிய பொறுப்புகளில் மேற்கூறிய மூன்று பேரும் முறையே பதவி வகித்தனர்.
இவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய பிறகு, டிஜிட்டல் கருவிகள், பல முக்கிய ஆவணங்கள், 10.39 லட்சம் ரொக்க பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.