ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியாவுக்கு சுற்றுப் பயணமாக வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று மொஹாலியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 276 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 52 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். ருதுராஜ் கெய்க்வாட் 71 ரன்னும் ஷுப்மன் கில் 74 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 3 ரன்னிலும், இஷான் கிஷான் 18 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.
கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்தார் சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். சூர்யகுமார் யாதவ் 50 ரன்னும், கே.எல்.ராகுல் 63 ரன்னும் எடுத்தார்.
இறுதியில் இந்திய அணி 48.4 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஸாம்பா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பாட் கம்மின்ஸ் மற்றும் சீன் அப்பாட் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.