ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை எளிதாக வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கத்திலிருந்தே இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.குசல் மெண்டிஸ் 3 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. இலங்கை அணி 50 ரன்னுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து ஆடிய இந்தியா விக்கெட் இழப்பின்றி விரைவாக 51 ரன்கள் எடுத்து வென்றது.
இந்திய தரப்பில் முகமது சிராஜ் அசத்தலாக பந்து வீசி 6 விக்கெட்டுகள் சாய்த்தார். அவர் ஆட்டநாயகனாகவும், தொடா் முழுவதுமாக 9 விக்கெட்டுகள் சாய்த்த குல்தீப் யாதவ் தொடா்நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.
இதன் மூலம் 8-ஆவது முறையாக கோப்பை வென்று, இந்திய அணி அதிகமுறை சாம்பியன் ஆன அணியாக நீடிக்கிறது. இதற்கு முன் 1984, 1988, 1990-91, 1995, 2010, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் இந்தியா கோப்பை வென்றுள்ளது.