ஆசியக் கோப்பை: வங்கதேசத்திடம் வீழ்ந்த இந்தியா!

வெற்றிப் பெற்ற மகிழ்ச்சியில் வங்கதேச அணியினர்
வெற்றிப் பெற்ற மகிழ்ச்சியில் வங்கதேச அணியினர்
Published on

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் கடைசி சூப்பா் 4 ஆட்டத்தில் வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

15ஆவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் 2 இடங்களைப் பிடித்த இந்தியா, இலங்கை அணிகள் ஏற்கெனவே இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டன.

இந்த நிலையில், சூப்பர் 4 சுற்றின் கடைசி லீக் போட்டியில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. வங்காளதேச அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஷகிப் - தௌஹித் கூட்டணி 101 ரன்கள் சேர்த்தது.

ஷகிப் - 80, தௌஹித் - 54, நசும் அகமது - 44 ரன் எடுத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். இதன் மூலம் வங்காளதேச அணி 50 ஓவர் முடிவில் 265 ரன்கள் சேர்த்தது.

இந்திய அணியின் சார்பில் ஷா்துல் தாக்குா் 3, முகமது ஷமி 2, கிருஷ்ணா, அக்ஸா் படேல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

பின்னா், இந்திய அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய கேப்டம் ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். திலக் வா்மா 5, கே.எல்.ராகுல் 19, இஷான் கிஷண் 5 ரன்களுக்கு வெளியேற, 94 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. எனினும் தொடக்க வீரா்களில் ஒருவராக வந்த சுப்மன் கில் நிலைத்து நின்று ஆடினார்.

மறுபுறம் சூா்யகுமாா் 26, ரவீந்திர ஜடேஜா 7 ரன்களுக்கு வெளியேறினர். நிதானமாக ஆடிவந்த சுப்மன் கில் 121 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஷா்துல் தாக்குா் 11 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, கடைசியில் அக்ஸா் படேல் 42 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். கடைசி விக்கெட்டாக முகமது ஷமி 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இறுதியில் இந்திய அணி, 49.5 ஓவா்களில் 259 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த வங்காளதேச அணிக்கு இது ஆறுதல் வெற்றியே.

logo
Andhimazhai
www.andhimazhai.com