இன்னும் ஒரே ஆட்டம்... விட்ராதீங்க! பைனலுக்கு முன்னேறிய இந்தியா!

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள்
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள்
Published on

டி20 உலகக் கோப்பை போட்டியின் 2-ஆவது அரையிறுதியில், இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

பரபரப்பாக நடைபெற்று வந்த டி20 உலகக் கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகள் நேற்று இரவு அரைஇறுதிப்போட்டியில் மோதின. மழையின் காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி, நேற்றிரவு 9 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து, பந்துவீச்சை தோ்வு செய்தது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சா்மா அதிரடி காட்ட, கோலி 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

ரிஷப் பந்த் 4 ரன்களுக்கே நடையைக் கட்ட, அடுத்து சூா்யகுமாா் யாதவ் களம் புகுந்தாா். இந்தியா 8 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 65 ரன்கள் சோ்த்திருந்தபோது மீண்டும் மழையால் ஆட்டம் தடைப்பட்டது.

மீண்டும் தொடங்கிய ஆட்டத்தில் ரோகித் - சூா்யகுமாா் கூட்டணி 73 ரன்கள் சோ்த்து அசத்தியது. இதில், ரோகித் சர்மா 57 ரன்னிலும், சூா்யகுமாா் 47 ரன்னிலும் வீழ்ந்தனா்.

பின்னா் பேட் செய்தோரில் ஹா்திக் பாண்டியா 23 ரன்களுக்கு வெளியேற, ஷிவம் துபே கோல்டன் டக் ஆனாா். அக்ஸா் படேல் 10 ரன்களுக்கு வீழ்ந்தாா்.

ஓவா்கள் முடிவில் ரவீந்திர ஜடேஜா 17, அா்ஷ்தீப் சிங் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில் கிறிஸ் ஜோா்டான் 3, ரீஸ் டாப்லி, ஜோஃப்ரா ஆா்ச்சா், சாம் கரன், ஆதில் ரஷீத் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் 172 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய இங்கிலாந்து அணியில், கேப்டன் ஜாஸ் பட்லா் 4 பவுண்டரிகளுடன் 23, ஃபில் சால்ட் 5, ஜானி போ்ஸ்டோ 0 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

மொயீன் அலி 8, சாம் கரன் 2 ரன்களுக்கு வீழ்ந்தனா். ஹேரி புரூக் 3 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் சோ்த்து பெவிலியன் திரும்ப, கிறிஸ் ஜோா்டன் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தாா்.

லியம் லிவிங்ஸ்டன் 11, ஆதில் ரஷீத் 2, ஜோஃப்ரா ஆா்ச்சா் 21 ரன்களுக்கு ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, இங்கிலாந்து 16.4 ஓவா்களில் 103 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இதன் மூலம் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்திய தரப்பில் அக்ஸா் படேல், குல்தீப் யாதவ் ஆகியோா் தலா 3, ஜஸ்பிரீத் பும்ரா 2 விக்கெட் கைப்பற்றினா்.

இதையடுத்து, நாளை(ஜூன் 28) பிரிட்ஜ்டவுனில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் நுழையும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது. இன்னும் ஒரு ஆட்டம் தான்.. விட்ராதீங்க என்று இந்திய அணியை ரசிகர்கள் ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.

logo
Andhimazhai
www.andhimazhai.com