எதிர்பாராத தோல்வி...இலங்கையிடம் இழந்த இந்தியா! #பெண்கள்_கிரிக்கெட்

மகளிர் ஆசியக் கோப்பையின் இறுதி போட்டி
மகளிர் ஆசியக் கோப்பையின் இறுதி போட்டி
Published on

2004ஆம் ஆண்டு முதன் முதலில் துவங்கிய பெண்களுக்கான ஆசியக்கோப்பையில் இருந்தது இரண்டே நாடுகள். ஒன்று இந்தியா. இன்னொன்று இலங்கை. அதிலிருந்த ஐந்து ஒரு நாள் போட்டிகளிலும் வென்று இந்தியா கோப்பையை கைப்பற்றியது.

அதற்கடுத்து 2005ஆம் ஆண்டு இணைந்தது பாகிஸ்தான். அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானில் நடைபெற்றது. ஆனால், ஏன்டா போட்டியில் கலந்துகொண்டோம் என்று புலம்பும் அளவுக்கு பாகிஸ்தான் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. அத்தனை ஆட்டத்திலும் பாகிஸ்தானை இலங்கை வென்றது. ஆனால் இலங்கை, பாகிஸ்தான் இரு அணிகளையும் இந்தியா வென்றது. இதிலும் ஒரு போட்டியில் கூட இந்தியா தோற்கவில்லை.

இறுதிப்போட்டியில் 50 ஓவர்களில் 269 ரன்கள் எடுத்து வெறும் 172 ரன்களில் இலங்கையை சுருட்டி 97 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது கோப்பையை வென்றது இந்திய மகளிர் அணி.

ஆசிய மகளிர் கோப்பை 2006: கோப்பையுடன் மித்தாலி ராஜ்
ஆசிய மகளிர் கோப்பை 2006: கோப்பையுடன் மித்தாலி ராஜ்

2006ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற தொடரில், பாகிஸ்தானை இலங்கை வெல்வது. இலங்கையையும், பாகிஸ்தானையும் இந்தியா வெல்லும் முக்கோணக்கதை இதிலும் தொடர்ந்தது. இறுதிப்போட்டியில் வெறும் 93 ரன்களுக்கு இலங்கையை சுருட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று மூன்றாம் கோப்பையை கைப்பற்றியது இந்தியா.

நான்காவது தொடர் 2008ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்றது. அதில், நான்காவது அணியாக சேர்ந்தது வங்கதேசம் (பங்ளாதேஷ்). இதில் எதிர்பாராத விதமாக வங்கதேசம் கூட பாகிஸ்தானை வென்றது. பதிலுக்கு பாகிஸ்தானும் வங்கதேசத்தை வென்று பழிதீர்த்துக்கொண்டது. மீண்டும் இந்தியா ஒரு போட்டியில் கூட தோற்காமல் இறுதிப்போட்டியில் 260/7 (50) ரன்கள் எடுத்து இலங்கையை வெறும் 83 ரன்கள் சுருட்டி நான்காம் கோப்பையை வென்றது.

ஆண்டு 2012. ஐந்தாம் தொடர். ஆட்டம் 50 ஓவரில் இருந்து டி20 ஆக மாறியது.

ஆசியக்கோப்பை என்று பெயர் வைத்துவிட்டு ஆசிய நாடுகள் இல்லாமல் இருந்தால் எப்படி? சீனாவில் நடைபெற்ற டி20 தொடரில், இப்போது புதிதாக தாய்லாந்து, ஹாங்காங், நேபாள், மற்றும் சீனா என நான்கு அணிகள் இணைந்து மொத்தம் எட்டு அணிகள் கொண்ட தொடராக மாறியது. ஆனால் இந்தியாவின் ஆதிக்கம் நின்றபாடில்லை. அதே சமயம் இலங்கையை விட அதிக பாயிண்டுகள் எடுத்து முன்னிலைக்கு வந்து நின்ற வங்கதேசத்தை பார்க்க எல்லோருக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். வெறும் குமாரு கொக்கி குமாரானது.

’சென்னை 28’ திரைப்படத்தில் ஒவ்வொரு ஆண்டும் ராயபுரம் 'ராக்கர்ஸ்’ அணியிடம் இறுதிப்போட்டியில் தோற்கும் 'ஷார்க்ஸ்’ அணியைப்போலிருந்த இலங்கை இந்த முறை,  அரையிறுதியில் இந்தியாவுடன் மோதி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. வங்கதேசத்தை வென்ற பாகிஸ்தானை 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஐந்தாவது கோப்பையை கைப்பற்றியது இந்தியா.

2016ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற இத்தொடரில்,  பாயிண்டுகள் அடிப்படையில் இந்தியா முதலிடத்திலும், பாகிஸ்தான் இரண்டாம் இடத்திலும் இருந்ததால் இறூதிப்போட்டியில் எப்போதும் போல இந்தியாவே வென்று ஆறாவது கோப்பையை கைப்பற்றியது.

2018ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற இத்தொடரில், முதல் முறையாக இந்திய மகளிர் அணி ஒரு தோல்வியை சந்தித்தது. ஆம். இதுவரையிலும் எந்த அணியிடமும் ஒரு போட்டியில் கூட தோற்காத இந்திய அணி முதன் முதலில் தன் தோல்வியை கண்டது.

இந்தியாவை தோற்கடித்தது இலங்கையாகத்தான் இருக்கும் என்று நீங்கள் கணித்தால், அது தான் தவறு.

இந்தியாவை வென்றது வங்கதேசம்....

ஆம். இந்தியாவிற்கு இணையாக வங்கதேசமும் கடுமையான ஆட்டத்தை அளித்திருந்தது. அதை விட ஆச்சரியமாக இறுதிப்போட்டியில் மீண்டும் வங்க தேசத்திடம் தோற்றது இந்தியா. இதன் மூலம் இந்தியா அல்லாத ஒரு தேசமாக ஆசிய கோப்பையை கைப்பற்றியது வங்க தேசம்.

இதில் ஒரு காமெடி என்னவென்றால் அத்தொடரில் வங்கதேசம் தோற்ற ஒரு ஆட்டம் அது இலங்கையுடன். ஆனால், அதே இலங்கையை இந்தியா வென்றிருந்தது.

ஒரு பக்கம் இந்தியாவுடன் தோற்றிருந்தாலும், தனக்குப்பின் நான்கு ஆண்டுகள் கழிந்து போட்டியில் இணைந்த வங்கதேசம் கோப்பையை வென்றதை நிச்சயம் இலங்கையால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.

கொரோனா நோய் தொற்றிற்கு பிறகு 2022-ஆம் ஆண்டு வங்க தேசத்தில் நடைபெற்ற இத்தொடரில் மலேசியாவும், அரபு ஐக்கிய நாடுகள் அணியும் இணைந்துகொண்டது. இதிலும் ஒரே ஒரு போட்டியில் மட்டும் தோற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா. இந்த முறை தோற்றது பாகிஸ்தானுடன்.

அரையிறுதியில் ஒரு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்ற இலங்கை, இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் எப்போதும் போல தோற்றது. அதும் 8 விக்கெட் வித்தியாசத்தில்.

இதுவரை நடைபெற்ற 8 தொடர்களில் இந்தியா பெற்றிருந்த கோப்பைகள் மொத்தம் 7. அனைத்து தொடரிலும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.

(இது வரலாறு.....)

அந்த வகையில் இது நாள் வரையிலும் இலங்கையிடம் தோற்காத அணி என்ற பெருமையை கொண்டிருந்த  இந்திய மகளிர் அணி முதல்முறையாக தோல்வியடைந்தது. அதுவும் இறுதிப்போட்டியில்.

9ஆவது ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்ற 8 அணிகளின் கேப்டன்கள்
9ஆவது ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்ற 8 அணிகளின் கேப்டன்கள்

இந்திய அணியை பொறுத்தவரை ஸ்ம்ரிதி மந்தனா நிலைத்து நின்று அரை சதம் எடுத்தாலும், இலங்கையில் கேப்டன் சாமரி அத்தபத்து (61) மற்றும் ஹர்ஷிதா சமரவிக்ரமா (69*) என இருவரின் அரைசதம் இலங்கை அணியின் ஸ்கோரை திடமாக்கியது. இதன் மூலம் எட்டு பந்துகள் மீதமிருக்கையில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆட்டத்தை வென்றது.

166 ரன்கள் இலக்கு என்பது கட்டுப்படுத்தக்கூடிய ரன் என்றாலும் கூட, இந்திய அணியிடம் சரியான திட்டம் இல்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது. கேப்டன் 'ஹர்மன்ப்ரீத் கர்’ கைக்கு வரும் பந்துகளை கோட்டை விடும் காட்சிகளை நம்மால் பார்க்க முடிந்தது.

சரியான திட்டமிடலின்றி பந்துவீச்சிலும் ஃபீல்டிங்கிலும் ஏகப்பட்ட சொதப்பல்களுடன் எட்டாவது முறையாக எளிமையாக வெல்ல வேண்டிய கோப்பையை இந்தியா இழந்துள்ளது.

இதன் மூலம், மகளிர் டி20 போட்டிகளில் உலகின் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்திய அணியிடமிருந்து, ஏழாவது இடத்திலிருக்கும் இலங்கை அணி முதல் முறையாக ஆசியக்கோப்பையை வென்றிருக்கிறது.

அதை விட முக்கியமாக, 20 ஆண்டுகள் கழித்து ஆசியக்கோப்பை தொடரில் முதல்முறையாக இந்தியாவை இலங்கை வென்றிருக்கிறது. ஒரு பக்கம் கோப்பையை வென்ற மகிழ்ச்சியும், இன்னொரு புறம் 20 ஆண்டுகளாக ஒரு முறை கூட வீழ்த்த முடியாத இந்தியாவை எப்படியோ வீழ்த்தி விட்டோம் என்ற நிம்மதியும் இலங்கைக்கு.

ஒருவேளை இலங்கை அரையிறுதிக்கோ, இறுதிக்கோ வராமல் போயிருந்தால் அது வேறு கதை. ஆனால், ஒவ்வொரு முறையும் போராடி இறுதிப்போட்டிக்கு முன்னேறி வெற்றிக்கு மிக அருகில் வந்து வாசலில் ஒரு அடி எடுத்து வைக்கும் நேரத்தில் மூடப்படும் கதவுகளை வெறித்துப்பார்க்கும் தருணம் அது விளையாட்டு வீரர்களுக்கு நிகழக்கூடாத அவலம்.

இத்தனை ஆண்டு கால தவத்தின் பூரிப்பையும், அதன் கொண்டாட்டமும், இலங்கை அணியினரிடம் காண முடிந்தது. இலங்கை அணியினருக்குக்கு வாழ்த்துக்கள்.

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com