டி20: ஏமாற்றிய கோலி; சிதறவிட்ட சூர்யகுமார்…!

டி20: ஏமாற்றிய கோலி; சிதறவிட்ட சூர்யகுமார்…!
Published on

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியில் இந்திய அணி 47 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா - வெஸ்ட் இண்டிஸில் நடந்து வருகிறது. லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து, சூப்பர் 8 சுற்று தொடங்கியுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்தியா, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ரன் சேர்க்க தடுமாறினார்கள். ரோகித் 8 ரன்னில் ஃபசல்ஹக் பாரூக்கி பந்தில் அவுட்டானார்.

அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 20 ரன்னிலும், நிதானமாக விளையாடிய கோலி 24 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். இவர்கள் இருவரும் தவறான ஷாட் அடிக்க முயற்சித்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த ஷிவம் துபே 10 ரன்னில், ரஷித்கான் சுழலில் வீழ்ந்தார்.

இதனால் இந்திய அணி 11 ஓவரில் 90/4 என தடுமாறியது. பின்பு ஜோடி சேர்ந்த வீரர் சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டத்தால் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். அவருக்கு ஹர்திக் பாண்ட்யா பக்கபலமாக விளங்கினார்.

5 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் அரைசதம் விளாசிய சூர்யகுமார் யாதவ் 53 ரன்னில் அவுட்டானார். ஹர்திக் பாண்ட்யா 32 ரன்னில் வெளியேறினார். கடைசியில் அக்சர் படேல் அதிரடியாக விளையாடி ரன்களை உயர்த்தினார்.

20 ஓவர் முடிவில் இந்திய அணி 181/8 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித்கான், ஃபசல்ஹக் பாரூக்கி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

அடுத்துக் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் இந்திய வேகத்தை சமாளிக்க முடியாமல் தள்ளாடினார்கள்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஹ்மானுல்லா குர்பாஸ் 11 ரன்னிலும், ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய் (2) அடுத்தடுத்து பும்ராவின் பந்தில் வீழ்ந்தனர். இந்த சரிவிலிருந்து ஆப்கானிஸ்தான் அணியால் நிமிர முடியவில்லை. 20 ஓவர் முடிவில் அந்த அணி 134 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 47 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்திய அணி தரப்பில் பும்ரா 4 ஓவரில் 7 ரன் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருது வென்றார். இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வங்கதேசத்தை சந்திக்கிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com