புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அன்ஷு்மான் கெய்க்வாட் (வயது 71) நேற்று காலமானார்.
சுனில் கவாஸ்கருடன் தொடக்க வீரராக களம் இறங்கிய கெய்க்வாட் அதிவேக பந்துவீச்சுகளை எதிர்கொண்டவராக இருந்தாலும் மிகவும் அமைதியானவர். மென்மையாக பேசக்கூடியவர். ஊடகத்தினர் எளிமையாக அணுகக் கூடியவராக இருந்தவர்.
தடுப்பு ஆட்டத்துக்கு ராகுல் டிராவிட், வி.வி.எஸ் லட்சுமண் போன்ற வீரர்களுக்கு கெய்க்வாட் முன்னோடி. 1983 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் கெய்க்வாட் இடம்பெற்றிருந்தார்.
இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் அன்ஷுமான். மேலும், இந்திய அணியின் பயிற்சியாளராகவும், தேர்வுக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அஞ்சுமன், லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இவரின் சிகிச்சைக்காக பிசிசிஐ தரப்பில் ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டிருந்தது.
இந்திய அணிக்காக சுமார் 22 ஆண்டுகளில் 205 முதல்தர போட்டிகளில் அஞ்சுமன் விளையாடியுள்ளார். அதிகபட்சமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 11 மணிநேரம் களத்தில் நின்று 201 ரன்கள் எடுத்தார்.
இவரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.