ஆப்கன் பெண்கள் கிரிக்கெட் அணி
ஆப்கன் பெண்கள் கிரிக்கெட் அணி

அகதிகள் கிரிக்கெட் அணி- ஆப்கன் பெண்கள் கடிதம்!

Published on

அகதிகள் பெண்கள் கிரிக்கெட் அணியை உருவாக்க உதவ வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் ஆப்கானிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் பெண் அணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாலிபன்களின் முதல் கட்ட ஆட்சி அதிகாரம் அமெரிக்கக் கூட்டுப் படைகளால் வீழ்த்தப்பட்ட பிறகு, 2010 ஆம் ஆண்டில் அந்நாட்டில் பெண்கள் கிரிக்கெட் அணி உருவாக்கப்பட்டது. ஆனாலும் தாலிபன்களின் அச்சுறுத்தல் காரணமாக சர்வதேசப் போட்டிகளில் விளையாட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெண்கள் அணிக்கு அனுமதி தரவில்லை.

இந்த சூழலில் அந்நாட்டில் மீண்டும் தாலிபான்களின் ஆட்சியதிகாரம் வந்த நிலையில், ஆண்கள் கிரிக்கெட் அணி பலம் பெற்று நல்ல பெயர் எடுத்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கன் ஆண்கள் அணி அரையிறுதிவரை சென்று சாதனை நிகழ்த்தியது.

இந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஆப்கன் முன்னாள் பெண்கள் கிரிக்கெட் அணியினர், சர்வதேச கிரிக்கெட் அமைப்பு- ஐ.சி.சி.க்கு எழுத்துப்பூர்வமான கோரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்டு அகதிகள் அணி ஒன்றை அமைக்கவும், தாங்கள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடவும் பயிற்சி அளிக்கவும், எல்லைகள் அற்ற ஒரு கிரிக்கெட் அணியை நிர்வகிக்கவும் தங்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று ஐ.சி.சி. தலைவர் கிரெக் பாக்லேவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஐ.சி.சி. என்ன பதில் சொல்லப்போகிறதோ?

logo
Andhimazhai
www.andhimazhai.com