நம் காலத்து டென்னிஸ் போட்டிகளில் ரோஜர் பெடரரும் ரபேல் நடாலும் களமிறங்கிவிட்டால் போட்டி அதிரும். ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் மோதுவார்கள்!
ரோஜர் பெடரர் 2022-இல் ஓய்வு பெற்றார். நடால் தற்போது ஓய்வுபெறப் போகிறார். இவர்கள் இருவரின் ஓய்வும் டென்னிஸ் ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தைத் தரும்! களிமண் தரையில் நடாலும் புல் தரைகளில் பெடரரும் மன்னர்கள்! நடால் தீவிரமாகவும் பெடரர் கம்பீரமாகவும் ஆடுவர்.
மைதானத்துக்கு வெளியே பெடரரும் நடாலும் சிறந்த நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். பெடரர் விளையாடிய கடைசிப் போட்டியில் அவரது இரட்டையர் இணை ஆட்டக்காரராக நடால் ஆடினார். இதோ நடால் தன் கடைசி ஆட்டத்தை ஆட இருக்கையில் பெடரர் தன் நண்பனுக்கு எழுதிய உணர்வுபூர்வமான கடிதம்:
வாமோஸ், @ரஃபேல் நடால் !
நீங்கள் டென்னிசிலிருந்து ஓய்வுபெறத் தயாராகும்போது. எனக்குப் பகிர்ந்துகொள்ள சில விஷயங்கள் உள்ளன. நான் உணர்ச்சிவயப்படுவதற்குள் அவற்றைச் சொல்லிவிடுகிறேன்.
வெளிப்படையாகத் தொடங்குவோம்: நீங்கள் என்னை நிறைய முறை வென்றீர்கள். நான் வென்றதைவிட அதிகமாக.
வேறு யாராலும் செய்ய முடியாத வகையில் நீங்கள் எனக்கு சவால் அளித்தீர்கள். களிமண் மைதானத்தில் ஆடுவது, நான் உங்கள் கொல்லைப்புறத்தில் ஆடுவதுபோல் இருந்தது. சும்மா நிலைத்துநிற்கவே என்னைக் கடினமாக உழைக்கவைத்தீர்கள். என் விளையாட்டை மாற்றி அமைக்கச் செய்தீர்கள். வசதியாக இருக்குமா என என் ராக்கெட் ஹெட்டைக்கூட மாற்றிப்பார்த்தேன்.
நான் மிகவும் மூடநம்பிக்கை கொண்டவன் அல்ல; ஆனால் நீங்கள் அதை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசென்றீர்கள். உங்கள் முழு செயல்முறை, அந்த சடங்குகள் எல்லாம் பொம்மை வீரர்கள் போல் உங்கள் தண்ணீர் பாட்டில்களை வரிசையாக அடுக்குதல், உங்கள் தலைமுடியைச் சரிசெய்தல், உங்கள் உள்ளாடைகளைச் சரிசெய்தல்... இவை அனைத்தையும் மிக அதிதீவிரத்துடன் செய்தீர்கள்.
நான் இவை அனைத்தையும் ரகசியமாக ரசித்தேன். ஏனென்றால் அது மிகவும் தனித்துவமானது - அது உங்களுக்கே உரியது.
ரஃபா, உங்களுக்குத் தெரியுமா... நீங்கள் என்னை விளையாட்டை இன்னும் அதிமாக ரசிக்க வைத்தீர்கள்!
சரி, ஒரு வேளை ஆரம்பத்தில் இல்லை எனலாம். 2004 ஆஸ்திரேலிய ஓபனுக்குப் பிறகு, நான் முதன்முறையாக உலகத் தரவரிசையின் முதல் இடத்தை அடைந்தேன். உலகின் உச்சியில் இருப்பதாக நினைத்தேன். எல்லாம் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே. நீங்கள் மியாமியில் உள்ள மைதானத்தில் உங்கள் சிவப்பு நிற ஸ்லீவ்லெஸ் சட்டையுடன், தோள்களைக் காட்டியபடி வந்தீர்கள். என்னை எளிதாக வென்றீர்கள். மல்லோர்காவைச் சேர்ந்த இந்த அற்புதமான இளம் வீரர், இந்தத் தலைமுறையின் திறமையானவர், பெரும் வெற்றிகளை பெறப் போகிறார் என்று உங்களைப் பற்றி நான் கேள்விப்பட்ட அனைத்தும் வெற்று சலசலப்புகள் அல்ல!
நாம் இருவரும் அப்போதுதான் நம் பயணத்தின் ஆரம்பத்தில் இருந்தோம். முடிவில் ஒன்றாகவே முடித்த பயணம் அது.
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, ரஃபா, நான் சொல்லவேண்டும்: 14 பிரெஞ்ச் ஓபன்கள் உட்பட எவ்வளவு நம்பமுடியாத வரலாற்று வெற்றிகளை நீங்கள் பெற்றீர்கள்! - ஸ்பெயினுக்குப் பெருமை சேர்த்தீர்கள்... டென்னிஸ் உலகையே பெருமைப்படுத்தினீர்கள்!
நாம் பகிர்ந்துகொண்ட நினைவுகளை எண்ணிக்கொள்கிறேன். விளையாட்டை பிரபலப்படுத்த ஒன்றாக ஆடினோம். அரைப் புல், அரைக் களிமண் மைதானத்தில் விளையாடினோம். தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் 50,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் விளையாடி அனைத்து நேரடிப் பார்வையாளர் வருகை சாதனையையும் முறியடித்தோம். எப்போதும் ஒருவரையொருவர் தகர்த்தெறிவோம். மைதானத்தில் ஒருவரையொருவர் களைப்படையச் செய்வோம். பின்னர் கோப்பையைப் பெறும்போது ஒருவரையொருவர் தாங்கிப் பிடிக்க நேருமளவுக்கு.
2016இல் ரஃபா நடால் அகாடமியைத் தொடங்குவதற்கு நீங்கள் என்னை மல்லோர்காவிற்கு அழைத்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உண்மையில், நானேதான் என்னை அழைக்க வைத்தேன் எனலாம். நீங்கள் மிகவும் கண்ணியமானவர் என்பதால் நான் வரவேண்டும் என வலியுறுத்தத் தயங்குவீர்கள் என்று எனக்குத் தெரியும்; ஆனால் நான் அதை இழக்க விரும்பவில்லை.
உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கு நீங்கள் எப்போதும் ஒரு முன்மாதிரியாக இருந்துவருகிறீர்கள். எங்கள் குழந்தைகள் அனைவரும் உங்கள் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றதில் மிர்காவும் நானும் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ஆயிரக்கணக்கான மற்ற இளம் வீரர்களைப் போலவே அவர்கள் மகிழ்வாகவும் நிறைவாகவும் கற்றுக்கொண்டனர். என் குழந்தைகள் வீட்டுக்குத் திரும்பிவரும்போது இடது கை ஆட்டக்காரர்கள் ஆகிவிடுவார்களோ என்பதுதான் ஒரே கவலை.
அதன் பிறகு லண்டன்-2022இல் லேவர் கோப்பை நடந்தது. அது எனது இறுதிப் போட்டி. நீங்கள் என் பக்கத்தில் இருந்தீர்கள், என் போட்டியாளராக அல்ல. ஆனால் எனது இரட்டையர் ஆட்டப் பங்குதாரராக. அன்றிரவு மைதானத்தையும் கண்ணீரையும் உங்களுடன் பகிர்ந்துகொண்டதும், எனது டென்னிஸ் வாழ்க்கையின் சிறப்புமிக்க தருணங்களில் ஒன்று.
ரஃபா, உங்கள் சிறந்த விளையாட்டு வாழ்க்கையின் கடைசிப் பகுதியில் நீங்கள் கவனம் செலுத்துகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். முடிந்ததும் பேசுவோம். இப்போதைக்கு, உங்கள் வெற்றியில் மகத்தான பங்கு வகித்த உங்கள் குடும்பத்தினரையும் குழுவையும் வாழ்த்த விரும்புகிறேன்.
உங்களின் இந்தப் பழைய நண்பன் எப்போதும் உங்களை உற்சாகப்படுத்துகிறான்; நீங்கள் அடுத்து செய்யும் எல்லாவற்றுக்கும் சத்தமாகக் கைதட்டுவான் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்!
வாழ்த்துகளுடன் உங்கள் ரசிகன்