சென்னையில் நடைபெற்ற பாா்முலா 4 காா் பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அடுத்த ஆண்டு போட்டி நடத்துவது குறித்து முதலமைச்சரிடம் கேட்டு முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான பார்முலா4 கார்பந்தயம் இந்தியாவில் 5 சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதன் இரண்டாவது சுற்று போட்டி சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி சென்னை தீவுத்திடலை சுற்றி 3.5 கிலோமீட்டர் சாலை பந்தயத்திற்கான ஓடுதளமாக மாற்றப்பட்டது. தெற்காசியாவிலேயே முதல் முறையாக நடக்கும் இந்த போட்டிக்காக இரவிலும் பகல் போல் ஜொலிக்கும் வகையில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.
போட்டி நேற்று முன் தினம் பிற்பகல் 2:30 மணிக்கு பயிற்சியுடன் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மழையின் காரணமாக சர்வதேச ஆட்டோ மொபைல் கூட்டமைப்பின் சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. மாலை சான்றிதழ் கிடைத்ததும், இரவு 7 மணிக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நான்கு மணி நேரம் தாமதம் ஆனதால் வீரர்கள் பயிற்சியில் மட்டுமே ஈடுபட்டனர். தகுதி சுற்று மறுநாளுக்குத் தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில், இரண்டாவது நாளான நேற்று தகுதி சுற்று, பிரதான பந்தயங்கள் அனைத்தும் திட்டமிட்டப்படை நடத்தப்பட்டது.
நேற்று மாலை முதலில் நடைபெற்ற பார்முலா4 போட்டியின் முதலாவது போட்டியில் 8 அணிகளைச் சேர்ந்த 16 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 18 வயதான கொச்சி வீரா் ஹியூக் பாா்டா் வெற்றி பெற்றாா். பந்தய இலக்கை அவா் 19 நிமிஷம் 42.95 விநாடிகளில் எட்டினாா். பெங்கால் டைகா்ஸ் வீரா் ருஹான் ஆல்வா 19 நிமிஷம் 50.25 விநாடிகளில் வந்து 2ஆம் இடத்தையும், பெங்களூர் ஸ்பீட்ஸ்டா்ஸ் வீரா் அபய் மோகன் 20 நிமிஷம் 9.02 விநாடிகளில் வந்து 3ஆம் இடமும் பிடித்தனர். பின்னர் இரவில் நடந்த இரண்டாவது சுற்றில் ஐதராபாத் பிளாக் பேர்ட்ஸ் அணியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க வீரர் அகில் அலிபாய் முதலிடம் பெற்றார். இரண்டாவது இடத்தை நந்தனும் (அகமதாபாத் அணி). மூன்றாவது இடத்தை ஜேடன் பரியாட்டும் (பெங்களூரு அணி) பெற்றனர்.
பார்முலா4 கார்பந்தயம் மட்டுமின்றி, இந்தியன் ரேஸிங் லீக்கும் நடைபெற்றது. இதில் 6 நாடுகளைச் சேர்ந்த 12 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில், ரேஸில் கோவா ஏசஸ் வீரா் ரௌல் ஹைமன் முதலிடமும், அதே அணியைச் சேர்ந்த வீராங்கனை கேப்ரியேலா ஜில்கோவா 2ஆம் இடமும் பிடித்தனர். பெங்கால் டைகா்ஸ் வீரா் அலிஸ்டா் யங் 3ஆம் இடம் பிடித்தார்.
இந்த பந்தயங்களை அணியின் உரிமையாளர்களான சவுரவ் கங்குலி, நாகசைதன்யா, அர்ஜுன் கபூர், ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோர் கண்டுகளித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
பின்னர் அவர் கூறியதாவது:
‘சென்னையில் நடந்த கார்பந்தயத்துக்கு பொதுமக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். புதியதாக நடத்தியதால் சிறுசிறு தடுமாற்றம் இருந்தன. என்றாலும் திட்டமிட்டபடி நடத்தி முடித்துள்ளோம். அடுத்த ஆண்டில் போட்டியை நடத்துவது குறித்து அனைவரிடம் கருத்துக் கேட்கப்பட்டு, முதலமைச்சரிடம் கேட்டு முடிவு எடுக்கப்படும்.’ என்றார்.