டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வங்கதேச அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அரைஇறுதிக்கு முன்னேறி சாதனை் படைத்துள்ளது.
சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் – வங்கதேச அணிகள் இன்று மோதின. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குர்பாஸ் 43 ரன்கள் விளாசினார்.
வங்கதேச அணி தரப்பில் ரிஷாத் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து, களமிறங்கிய வங்கதேச தொடக்க வீரரான லிட்டன் தாஸ் இறுதிவரை நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விக்கெட்டை இழக்காமல் ஆடிய அவர் 49 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். அணியின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க, ஆப்கானிஸ்தான் 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், நவீன்-உல்-ஹக் இருவரும் தலா 4 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
குறைவான ரன்களே எடுத்தபோதும் வங்க தேச அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது ஆப்கானிஸ்தான். இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் அரையிறுதிக் கனவைத் தகர்த்தது. அரை இறுதியில் தென் ஆப்பிரிக்காவை ஆப்கானிஸ்தான் எதிர்கொள்கிறது. ஆப்கன் அணியினரும் ரசிகர்களும் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
“ யாருமே எங்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை. பிரையன் லாரா மட்டுமே நாங்கள் அரையிறுதியில் நுழைவோம் என்று கணித்திருந்தார். வரவேற்பு நிகழ்ச்சியில் அவரை சந்தித்தபோது உங்கள் கருத்தை நனவாக்குவோம் என்று வாக்குக் கொடுத்தேன்.. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார் ஆப்கன் அணியின் தலைவர் ரஷித்கான்.
ஆஸிக்கு ஆப்பு அடித்ததில் இந்திய ரசிகர்களுக்கு குஷிதான். ஆனாலும் அவ்வளவு பெரிய அணி அரை இறுதிக்குக் கூட வரமுடியாமல் போனதில்தான் கிரிக்கெட்டின் சுவாரசியம் அடங்கி இருக்கிறது!