ஒவ்வொரு வருடமும் ஜுரம் வருதில்லே... ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை- அமைச்சர் தமாஷ்

SS SIVASANKAR
அமைச்சர் சிவசங்கர்
Published on

தீபாவளியை முன்னிட்டு  சென்னையிலிருந்து ஊருக்குச் செல்பவர்கள் வசதிக்காக 11,176 சிறப்புப்  பேருந்துகள் வரும் 28 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ். எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

'கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் போன்ற இடங்களில் இருந்து மட்டும் இந்த பேருந்துகள் கிளம்பும். கடந்த ஆண்டு போல் கேகே நகர், அடையாறு போன்ற இடங்களில் இருந்து இவை கிளம்பாது. கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் செயல்பாட்டுக்கு வந்தமையால் இந்த மூன்று இடங்களே போதுமானது. 

கிளாம்பாக்கத்தில் ஏழு முன்பதிவு முனையங்களும் கோயம்பேட்டில் 2 முன்பதிவு நிலையங்களும் இயங்குகின்றன. இதுவரை 1,02000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த ஆண்டு 1,20,000 பேர்வரை முன்பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  பயணிகள் வசதிக்காக 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாடு அறை உள்ளது. இதை 94450 14436 என்ற எண்ணில் எந்த நேரத்திலும் தொடர்புகொள்ளலாம்' என்றும் அவர் கூறினார்.

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது பற்றி புகார் தெரிவிக்க 1800 4256151, 044 -2474 9002, 044- 2628 0445, 044-2681611 என்ற எண்களையும் அவர் அறிவித்தார்.

இம்முறை தனியார் பேருந்துகளையும் சிறப்புப் பேருந்துகளாக இயக்க உள்ளதாகவும் அவற்றிலும் அரசு நிர்ணயித்த பயணக் கட்டணமே வசூலிக்கப்படும் என்றார். ஆனால் இது தனியார் மயமாக்கல் இல்லை; அரசு 7,200 பேருந்துகள் வாங்க இருக்கிறது; தொழிலாளர்களைப் பணிக்கு எடுத்துக்கொண்டிருக்கிறது; இப்படி இருக்கையில் தனியார்மயமாக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

ஆம்னி பேருந்துகளின் கட்டணக்கொள்ளை பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில், ஆண்டுதோறும் இந்தப் பிரச்னை வருவதாகவும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் பேசி இரண்டு ஆண்டுகளாக கட்டணத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

”ஒவ்வொரு வருடமும் ஜுரம் வருகிறது. அதைத் தவிர்க்க இயலாததுபோல இந்த கட்டணப் பிரச்னையும் வருகிறது. அதைக் கட்டுக்குள்தான் வைத்துள்ளோம். நடவடிக்கை எடுக்கிறோம். பொதுமக்கள் புகார் கொடுக்கலாம்.” என்றும் அவர் கூறினார்.

வரும் 24ஆம் தேதி ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கூட்டம் கூட்டி கட்டணக் கட்டுப்பாட்டைப் பற்றிப் பேச இருப்பதாகவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com