ரஷ்யாவுக்கு விரைவில் புதிய அதிபர் கிடைப்பார் – வாக்னர் ஆயுதக் குழு எச்சரிக்கை!

வாக்னர் ஆயுதக் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் - ரஷ்ய அதிபர் புதின்
வாக்னர் ஆயுதக் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் - ரஷ்ய அதிபர் புதின்
Published on

ரஷ்யாவுக்கு விரைவில் புதிய அதிபர் கிடைப்பார் என்று அந்நாட்டு அதிபர் புதின் பேச்சுக்கு வாக்னர் ஆயுதக் குழு பதிலடி கொடுத்துள்ளது.

உக்ரைன் போரை எதிர்கொள்ள ரஷ்யா சார்பில், களமிறக்கப்பட்ட வாக்னர் ஆயுதக் குழுவினர் மீது ரஷ்ய ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துகிறது. இதனால் ரஷ்யாவின் தலைமையகத்தைக் கவிழ்க்க, படையெடுப்போம் என வாக்னர் ஆயுதக் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் எச்சரிக்கை விடுத்து இருந்தார். இதனால் தெற்கு ரஷ்யாவில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

இது தொடர்பாக, தொலைக்காட்சி உரையில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், “வாக்னர் ஆயுதக் குழு முதுகில் குத்திவிட்டது. இது அப்பட்டமான துரோகம். நாட்டைக் காக்க போராடிக் கொண்டிருக்கும்போது தனிநபர் விருப்பங்களுக்காக ஆயுதம் ஏந்துவது தேசத் துரோகக் குற்றம். இக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையான தண்டனையை அனுபவிக்க வேண்டும். கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளான தலைமையைப் பின்பற்றாமல் வீரர்கள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும்” என்று கூறியவர், வாக்னர் குழுவை ஒரு தீவிரவாதக் குழு என்றும் அவர் அறிவித்துள்ளார்.

அதிபர் பேசி முடித்த அடுத்த சில நிமிடங்களிலேயே வாக்னர் குழு தனது டெலிகிராம் பக்கத்தில் பதிலடியைப் பதிவிட்டுள்ளது. அதில், ‘ரஷ்ய அதிபர் தவறான முடிவை எடுத்துள்ளார். விரைவில் ரஷ்யாவுக்கு புதிய அதிபர் கிடைப்பார்’என்று பதிவிட்டுள்ளது.

மேலும், “தாய்நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டதாகக் கூறுகிறார் அதிபர் புதின். அது ஓர் ஆழமான தவறு. நாங்கள் தாய்நாட்டின் பாதுகாவலர்கள். புதினின் வேண்டுகோளை எனது படை வீரர்கள் கேட்க மாட்டார்கள். ஏனெனில், எங்களுக்கு எங்களின் தேசம் ஊழல், சதி மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் சிக்கியிருப்பதில் விருப்பமில்லை” என்று கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com