நம்பர் 18/11, பின்னி நகர் மெயின் ரோடு, கொடுங்கையூர். இந்த முகவரியில் அப்படியென்ன ஸ்பெஷல் என்று கேட்கிறீர்களா? ஆமாம் ஸ்பெஷல்தாங்க!
சில பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து ஸ்பெஷலான ஐட்டம் ஒன்றை மேற்சொன்ன முகவரி கொண்ட வீட்டில்தான் தயாரிக்க முற்பட்டு, கையும்களவுமாக பிடிபட்டு தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் தயாரிக்க நினைத்த அந்த ஸ்பெஷலான ஐட்டம் என்ன? அவர்கள் ஏன் இதை செய்ய முன்வந்தார்கள் என்பதை அறிய இந்த செய்தியை முழுமையாகப் படியுங்கள்.
மேற்சொன்ன முகவரியில் தனியாக வசித்து வந்தவர் பிரவீன். பொறியியல் பட்டதாரியான இவரும், இவருடைய நண்பர்களான கிஷோர், நவீன், தனுஷ் ஆகிய மூன்று பேரும் படித்த படிப்புக்கு வேலை கிடைக்காததால், சமூக ஊடகங்கள் வாயிலாக பணம் சம்பாதிப்பதற்கான வழிகளைத் தேடி வந்துள்ளனர்.
இந்த சமயத்தில்தான் இவர்களுக்கு பிஸ்.சி. வேதியியல் தங்கப்பதக்கம் வென்ற ஞானப்பாண்டியனின் அறிமுகம் கிடைத்துள்ளது. இவர்தான், பட்டதாரி இளைஞர்களுக்கு மெத்தாம்பிட்டமைன் என்ற போதை மருந்து தயாரிப்பதற்கான ஆய்வகத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர்கள் நான்கு பேரும் டார்க் வெப்பிலிருந்து பல்வேறு வீடியோக்களை டவுன்லோடு செய்து பார்த்துள்ளனர்.
மெத்தாம்பிட்டமைன் தயாரிப்பதற்கான ஒரு ரசாயனத்தை செளகார்பேட்டையில் உள்ள ஒரு கடையிலும் மற்றொரு ரசாயனத்தை இணையதளம் வாயிலாகவும் வாங்கியுள்ளனர். மூன்றாவது முக்கியமான ரசாயனத்தை வாங்க முடியாதபோதுதான், இந்த குறிப்பிட்ட ரசாயனத்தை பிரவீன் வீட்டில் தயாரித்துப் பார்க்கலாம் என ஞானபாண்டியன் கூறியுள்ளார். இதை அவர்கள் செய்வதற்கு முன்னர்தான் காவல்துறையினர் பிரவீன் வீட்டை சுற்றி வளைத்துள்ளனர். இந்த வீட்டிலிருந்து சோடியம் ஹைட்ராக்சைடு கரைசல், நாப்தால், அசிட்டோன், சோடியம் கார்பனேட், சோடியம் ஹைட்ரஜன் கார்பனேட் போன்ற ரசாயனங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 4 பொறியியல் பட்டதாரிகள், ஞானபாண்டியனுடன் சேர்த்து இருபது வயதாகும் பிரான்சிஸ், அருண்குமார் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தயாரிக்க நினைத்த செயற்கை மருந்து ஒரு கிராம் ரூ. 1000 விலையில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
காவல் துறைக்கு எப்படித் தெரியும்?
சென்னையில் சமீபத்தில் மெத்தாம்பிட்டமைனை கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு போலீசார் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இரண்டு மாதமாக உளவுத்துறை திரட்டிய தகவலின் அடிப்படையில், ஒரு குழுவினர் சில குறிப்பிட்ட ரசாயனத்தை வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையிலேயே பிரவீனின் வீட்டை சென்னை மாநகர போலீசார் சுற்றி வளைத்தனர்.
எப்படி ஒருங்கிணைத்தார்கள்?
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் ஆரம்பத்தில் சிறிய அளவில் தம்மிடம் இருந்த சில ரசாயனங்களைப் பயன்படுத்தி மெத்தாம்பிட்டமைனைத் தயாரிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு முடிவு வரவில்லை.
இதைத் தொடர்ந்து, வேதியியலில் டாப்பராக உள்ள ஒருவரை தங்கள் திட்டத்தில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளனர். அப்படித்தான் அவர்களுக்கு வேதியியல் தங்கப்பதக்கம் வென்ற ஞானபண்டியன் என்பவர் கிடைத்துள்ளார். அவர்தான் இவர்களுக்கு மெத்தாம்பிட்டமைனைத் தயாரிப்பதற்கான ஆய்வகம் அமைத்துக் கொடுத்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான தனுஷ் குமார், ஆய்வகத்தை அமைப்பதற்கு சில நிதிகளை வழங்க முன்வந்துள்ளார். கைதுசெய்யப்பட்டுள்ள கிஷோர் என்பவர் செளகார்பேட்டையில் உள்ள ரசாயன கடைகளிலிருந்து மூலப்பொருட்களை வாங்குவதற்கு உதவி செய்துள்ளார்.
கூட்டு முயற்சியால் எதையெல்லாமோ சாதித்த இளைஞர்கள், இன்று கூட்டாக சேர்ந்து கொலை, கொள்ளை, போதைப்பொருள் உற்பத்தி போன்ற சமூகவிரோத செயலில் ஈடுபடுவது எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.