பெங்களூரில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் ரத்து!

பெங்களூரில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் ரத்து!
Published on

பெங்களூருவில் ஜூலை 13,14 ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமாா் முன்னெடுப்பில் எதிர்க்கட்சிகள் கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி பாட்னாவில் நடைபெற்றது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாா், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, தமிழக முதல்வர் ஸ்டாலின், சமாஜ்வாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

மேலும் ஜூலை 12இல் ஹிமாசல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெறும் என்றும் இரண்டாவது கூட்டத்திற்குக் காங்கிரஸ் தலைமை வகிக்கும் என்றும் அன்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இக்கூட்டம் பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. ஜூலை 13-14 தேதிகளில் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் நடைபெறும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவித்தார்.

இதற்கிடையே, மேக்கே தாட்டு விவகாரத்தில் கர்நாடகத்தில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தை வேறு மாநிலத்திற்கு மாற்ற திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதேபோல், பீகார் மற்றும் கர்நாடக மாநிலத்தின் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளதால், எதிர்க்கட்சிகளின் கூட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடிந்த பிறகு எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com