ஓமந்தூரார் அரசு பொது மருத்துவமனை ஒருபோதும் தலைமைச் செயலகமாக மாற்றப்படாது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் நிலவி வரும் இட நெருக்கடி, பாதுகாப்பின்மை உள்ளிட்ட பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு, ஓமந்தூரார் வளாகத்திற்கு தலைமைச் செயலகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியது. இதனால், ஓமந்தூரார் மருத்துவமனை மாற்றப்பட்டு, அங்கு தலைமைச் செயலகம் செயல்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு அரசு மருத்துவமனையில் ரூ.8.72 கோடி மதிப்பிலான நவீன டெஸ்லா ஸ்கேன் இயந்திரம், ரூ.3.94 கோடி மதிப்பிலான குடல் இரைப்பை உள்நோக்கி கருவி ஆகியவற்றை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, இதய மற்றும் கண் சிகிச்சை தொடர்பான அதிக சிகிச்சை நடைபெறும் மருத்துவமனையாக ஓமந்தூரார் மருத்துவமனை உள்ளது.
இந்த மருத்துவமனை தொடங்கி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை தினந்தோறும் வந்துக் கொண்டிருந்த புறநோயாளிகளின் எண்ணிக்கை அதிகபட்சம் 500 ஆக இருந்தது. இப்போது 1500 லிருந்து 2000 பேர் வரை வருகின்றனர். மருத்துவ தேவை தற்போது கூடிக் கொண்டிருப்பதால், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை எப்போதும் தலைமைச் செயலகமாக மாறாது” என்றார்.
நாகப்பட்டினம், நாமக்கல்லில் கட்டுப்பட்டுள்ள மருத்துவமனைகள் திறக்கப்படாமல் இருக்கிறதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய மருத்துவக் கல்லூரியில் போதிய குடிநீர் வசதி இல்லை. விளைநிலங்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளதால், பயன்பாட்டிற்குக் கொண்டுவர தாமதம் ஏற்படுகிறது. இரண்டு கிணறு வெட்டி அதிலிருந்து தண்ணீர் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்” என்றார்.