நீட் தேர்வு விவகாரத்தில் திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே பல்டி அடித்து விட்டதாக அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சேலத்தில் இன்று ஊடகத்தினரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது,”எப்போது பார்த்தலும், அதிமுக பல அணிகளாக பிரிந்துவிட்டதாக சொல்லிக் கொண்டிருந்தீர்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. அதிமுக என்பது இனி ஒன்று தான். அது எங்கள் தரப்புதான். நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அதை உறுதிப்படுத்தியுள்ளது.”என்றவர், தமிழ்நாட்டிலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி அதிமுக என்று கூறினார்.
மேலும், “கடந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது உதயநிதி ஸ்டாலின் என்ன சொன்னார். திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்திலேயே நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றார். அதன் பிறகு, நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் இருப்பதாகச் சொன்னார். இது தான் ரகசியமா? உதயநிதி எங்களுக்கு பெருமையைக் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. நீட் தேர்வை யார் கொண்டு வந்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு விவகாரத்தில் அப்படியே அந்தர் பல்டி அடித்துவிட்டது திமுக” என்றார்.