இந்தியாவில் 13.13 லட்சம் பெண்களை காணவில்லை! -மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் 13.13 லட்சம் பெண்களை காணவில்லை! -மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
Published on

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் (2019-2021) 13.13 லட்சம் சிறுமிகளும் பெண்களும் காணாமல் போயிருப்பதாக மத்திய அரசு வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் காணாமல் போன பெண்கள் குறித்த தகவல்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சேகரித்தது. இந்தத் தகவல்களை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2019 முதல் 2021ஆம் ஆண்டு வரை நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட 10,61,648 பெண்களும், 2,51,430 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர்.

நாட்டிலேயே மத்திய பிரதேசத்தில்தான் அதிக அளவிலான பெண்கள் காணாமல் போயுள்ளனர். அங்கு 2019 முதல் 2021-ஆம் ஆண்டு வரை 1,60,180 பெண்களும், 38,234 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர்.

அதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் இதே காலகட்டத்தில் 1,56,905 பெண்களும், 36,606 சிறுமிகளும் காணாமல் போய்விட்டனர். மகாராஷ்டிரத்தில் 1,78,400 பெண்களும் 13,033 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர்.ஒடிசாவில் இதே காலகட்டத்தில் 70,222 பெண்களும் 16,649 சிறுமிகளும் காணாமல் போய்விட்டனர். சத்தீஸ்கரில் 49,116 பெண்களும் 10,817 சிறுமிகளும் காணாமல் போய்விட்டனர்.

யூனியன் பிரதேசங்களைப் பொருத்தவரை, தில்லியில் அதிக அளவிலான பெண்கள் காணாமல் போய்விட்டனர்.

தில்லியில் 61,054 பெண்களும் 22,919 சிறுமிகளும் காணாமல் போய்விட்டனர். ஜம்மு-காஷ்மீரில் 8,617 பெண்களும் 1,148 சிறுமிகளும் காணாமல் போய்விட்டனர். மத்திய அரசின் இந்த புள்ளி விவரம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com