நடிகை சமந்தா – நாகசைதன்யாவின் மண முறிவு குறித்து தெலங்கானா அமைச்சர் பேசிய விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. அதற்கான எதிர்வினைகளும் எழுந்த தொடங்கியுள்ளன.
அமைச்சர் கொண்டா சுரேகாவின் பேச்சுக்கு சமந்தா – நாகசைதன்யா இருவரும் காட்டமாக பதிலளித்துள்ளனர்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். அப்படி சினிமாவில் தன்னுடன் இணைந்து நடித்த நாக சைதன்யாவை காதலித்து, கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர், இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021இல் விவாகரத்து பெற்றனர்.
இந்த விவகாரத்துக்கான காரணம் குறித்து சமந்தா, நாக சைதன்யா எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தனர். இதனிடையே, நாக சைதன்யா, சக நடிகை சோபிதா துலிபாலாவை 2ஆவது திருமணம் செய்து கொள்ள நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
இதனிடையே, சமந்தா - நாக சைதன்யா விவாகரத்துக்கு முன்னாள் அமைச்சர் கே.டி. ராமராவ் தான் காரணம் என்று தெலுங்கானா காங்கிரஸ் அமைச்சர் கொண்டா சுரேகா பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல், கே.டி.ராமராவால், சமந்தாவைப் போல பல பெண்கள் திருமணம் செய்து கொண்டு, திரையுலகை விட்டே சென்று விட்டதாகவும் குண்டை தூக்கிப் போட்டார்.
அமைச்சரின் இந்தக் கருத்துக்கு நடிகரும், சமந்தாவின் முன்னாள் மாமனாருமான நாகார்ஜூனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேவேளையில், தன் மீது அவதூறு கருத்து பரப்பும் விதமாக, அமைச்சர் சுரேகா கருத்து தெரிவித்திருப்பதாகவும், அதனை உடனே திரும்பப் பெறவில்லை என்றால், சட்டப்படி வழக்கு தொடர்வேன் என்று முன்னாள் அமைச்சர் கே.டி. ராமராவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சமந்தா கடும் கோபத்துடன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
“திரைத்துறையில் பல சிரமங்களை கடந்து ஒரு பெண்ணாக போராடிக் கொண்டிருக்கிறேன். அமைச்சர் கோண்டா சுரேகாவின் கருத்துக்கு நான் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய விவாகரத்து பரஸ்பரமானது. தயவு செய்து மற்றவர்களின் தனி உரிமையை மதிக்கவும். பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண்ணாக, எங்கள் குடும்பத்திற்கு எதிரான உங்கள் கருத்துக்கள் முற்றிலும் பொருத்தமற்றவை, தவறானவை. உங்கள் கருத்துக்களை உடனே திரும்பப் பெற வேண்டும்.
உங்களின் அரசியல் சண்டையில் என் பெயரை இழுக்க வேண்டாம். அரசியலுக்கு அப்பாற்பட்டே இருக்கிறேன். அப்படியே இருக்கவே நான் ஆசைப்படுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நாகசைதன்யா தனது எக்ஸ் தள பக்கத்தில்:
“விவாகரத்து முடிவு என்பது மிகவும் வேதனையான மற்றும் துரதிர்ஷ்டவசமான வாழ்க்கை முடிவுகளில் ஒன்றாகும். பல யோசனைகளுக்குப் பிறகு பரஸ்பரமாக நானும் எனது முன்னாள் மனைவியும் இந்த முடிவை எடுத்தோம். இருவரின் வேறுபட்ட இலக்குகளை நோக்கிய பயணத்தை மனதில் வைத்து இருவரும் ஒவ்வொருவரின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு எடுத்த முடிவாகும். ஆனால் இப்போது இந்த விஷயத்தில் அபத்தமான மற்றும் ஏற்க முடியாத வதந்திகள் பரப்பபடுகிறது.
எனது முன்னாள் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மதிப்பளித்து நான் இதுபற்றி வெளியில் எதுவும் பேசாமல் இருந்தேன். ஆனால் இன்று, அமைச்சர் கொண்டா சுரேகா தவறான தகவலை கூறியது மட்டுமில்லாமல், அபத்தமான, ஏற்க முடியாத கருத்தை தெரிவித்துள்ளார். பெண்கள் என்றைக்குமே மதிக்கப்பட வேண்டியவர்கள். மீடியாவில் வர வேண்டும் என்பதற்காக பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் கருத்து தெரிவிப்பது அவமானத்துக்குரியது” என்று சைதன்யா காட்டமாக விமர்சித்துள்ளார்.
மேலும், அமைச்சர் கொண்டா சுரேகாவின் பேச்சுக்கு தெலுங்கு திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.