சர்ச்சையான பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட கனிமொழி!

மாணவர்களுடன் காலை உணவு சாப்பிடும் கனிமொழி எம்.பி.
மாணவர்களுடன் காலை உணவு சாப்பிடும் கனிமொழி எம்.பி.
Published on

பட்டியல் சமூகத்துப் பெண் சமைத்தது என்பதால், காலை உணவை குழந்தைகள் சாப்பிடக் கூடாது என கோவில்பட்டி அருகில் பெற்றோர் பள்ளியில் பிரச்னை செய்தனர். அப்பள்ளிக்கு இன்று நேரில் சென்ற கனிமொழி எம்.பி. மாணவர்களுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள உசிலம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 11 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அதே பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரி என்பவர் இப்பள்ளியில் மகளிர் சுய உதவித் திட்டத்தின்படி சமையல் பணிகளைச் செய்து வருகிறார்.

அவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் எனக்கூறி, அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் காலை உணவுத் திட்டத்தில் உணவை சாப்பிடாமல் இருந்துள்ளனர். இதற்கு மாணவர்களின் பெற்றோர்கள்தான் காரணம் எனக் கூறப்பட்டது. இது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாக... சமூக ஊடகங்களில் பரவி பெரும் சர்ச்சையாகா ஆனது.

இந்த நிலையில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி இன்று காலை அந்தப் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அமைச்சர் கீதா ஜீவனும் உடனிருந்தார்.

அப்போது, மாணவர்களிடம் நலம் விசாரித்த கனிமொழி எம்.பி, அவர்களுக்கு என்ன உணவெல்லாம் பிடிக்கும் என்பதைக் கேட்டறிந்தார். பிறகு, தானே மாணவர்களுக்கு உப்புமாவை தட்டில் போட்டுக் கொடுத்தார். கையோடு அவரும் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை முடித்தார்.

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோரும் உடனிருந்தனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com