கட்சி வன்முறைகளுக்கும் கொலைகளுக்கும் பெயர் எடுத்த மேற்கு வங்கத்தில், பஞ்சாயத்துத் தேர்தல் நாளான சனிக்கிழமையன்று குறைந்தது 18 கொலைகள் பதிவாகியுள்ளன. ஜூன் 8 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து மொத்தம் 40 பேர் உயிரிழந்துள்ளனர்!
திரிணாமூல் காங்கிரஸ் ஓரணியிலும் இடது - காங்கிரஸ் கட்சிகள் ஓரணியிலும் பாஜக ஓரணியிலுமாக மும்முனை போட்டியாக மேற்கு வங்கம் கடந்த 10 ஆண்டுகளில் தேர்தலை சந்தித்து வருகிறது. ஒவ்வொரு தேர்தலின் போதும் வன்முறைகளும் கொலைகளும் பிரிக்க முடியாத நிகழ்வுகளாகிவிட்டன. தெலுங்கு பட ரத்தக்காட்சிகளை மிஞ்சும் வகையில் இந்த அரசியல் கொலைகள் உள்ளன.
எதிர்வரும் மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக அம்மாநிலத்தில் நடந்த இந்த பஞ்சாயது தேர்தலின் போது, அனைத்து மாவட்டங்களிலும் வன்முறை மற்றும் முறைகேடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரங்களிலேயே வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பெட்டிகளில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
கிழக்கு பர்த்வானில் உள்ள ஆஸ்கிராமைச் சேர்ந்த அமித் நாயக் என்ற வாக்காளர், “என்னால் வாக்களிக்க முடியாது, ஆயுதமேந்திய குண்டர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எங்களை வாக்களிக்க அனுமதிக்க மாட்டார்கள். நாங்கள் எங்கும் புகார் அளிக்க முடியாது. தேர்தல் கமிஷன் போனை எடுத்தாலும், எந்த உத்தரவாதமும் தருவதில்லை” என புலம்புகிறார்.
கொல்கத்தாவை ஒட்டிய சாட்டிலைட் டவுன்ஷிப்பில் உள்ள நியூ டவுனில், உயரமான குடியிருப்புகள் மற்றும் நுழைவாயில் உள்ள சமூகங்களில் வசிப்பவர்கள், 'வாக்கு புறக்கணிப்பு' என்ற போர்வையில், தெரியாத நபர்களால் மிரட்டல், அச்சுறுத்தல் மற்றும் வாக்களிக்க விடாமல் தடுக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து புகார் அளித்துள்ளனர்.
பல சம்பவங்களில் ஆளும் திரிணாமூல் கட்சியினரே ஈடுபட்டதாக, எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களும் இறந்துள்ளதாக கணக்கு காட்டுகின்றனர் அக்கட்சியினர்.
சி-வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு கணக்கெடுப்பின்படி, பெரும்பாலான மாவட்டங்களை திரிணாமூல் தக்கவைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு வங்கத்தில் உள்ள அரசியல் நிபுணர்களும் பாஜக மற்றும் இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணியை விட திரிணாமூல் முன்னிலை பெறும் என்றே கணித்துள்ளனர். ஆனால், ஏன் இந்த வன்முறை திதி என்றே, அரசியல் நோக்கர்கள் கேட்கின்றனர்.