நேற்று பாரத ஜனாதிபதி..இன்று பாரத பிரதமர்- தொடரும் சர்ச்சை!

இந்தோனேசியா செல்லும் பிரதமரின் நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழ்
இந்தோனேசியா செல்லும் பிரதமரின் நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழ்
Published on

இந்தோனேசியா செல்லும் பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சி நிரலில் ‘பாரத பிரதமர்’ எனக் குறிப்பிட்டிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணியை எதிர்கொள்ளும் நோக்கில் காங்கிரஸ், திமுக, திரிணாமூல், ஆம் ஆத்மி உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணியை அமைத்துள்ளன.

ஜி20 மாநாட்டின் விருந்துக்கான அழைப்பிதழில் ‘இந்திய குடியரசுத் தலைவர்’ என்பதற்குப் பதிலாக ‘பாரத குடியரசுத் தலைவர்’ என அச்சிடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், இந்தோனேசியா தலைநகர் ஜகாா்தாவில் நாளை நடைபெறும் 20-ஆவது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நிரலில் இந்திய பிரதமர் என்பதற்கு பதிலாக பாரத பிரதமர் என்று அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ‘மோடி அரசு எவ்வளவு குழப்பத்தில் உள்ளது பாருங்கள்! 20வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பாரதப் பிரதமர்.

எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி இந்தியா என்று சொல்லிக் கொள்வதால் தான் இந்த நாடகம்” என்று பதிவிட்டுள்ளார்.

நேற்று குடியரசுத் தலைவர் மாளிகை அழைப்பிதழில் பாரத குடியரசுத் தலைவர் என்று அச்சிடப்பட்டிருந்தது அரசியல் பெரும் புயலைக் கிளப்பி உள்ள நிலையில், இன்று பாரத பிரதமர் என்று குறிப்பிடப்பட்டிருப்பது சர்ச்சையை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்தியாவுக்கு பதிலாக பாரதம் என்ற பெயரை பாஜக அரசு முன்மொழிய உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com